Saturday, August 3, 2024

பொறுப்பற்ற பதில் கூறல்கள்...




 அண்மையில் ஆசிரிய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது....


அவன்: வணக்கம் அண்ணா...


நான்: ஓம் வணக்கம், சொல்லடா! என்ன கதை...


அவன்: அண்ணா, கல்வியும் இணைபாடச் செயற்பாடுகளுமா? அல்லது இணைபாடச் செயற்பாடுகளும் கல்வியுமா?


நான்: அது ஒவ்வொரு பாடசாலையையும் பொறுத்ததுடா. ஏன் கேக்கிறா?


அவன்: 


அண்ணா, ஆங்கில தினப் போட்டி; தமிழ் தினப் போட்டி, ஒலிம்பியாட் போட்டி, கடேட்,கோட்டம், வலயம், மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள், பள்ளிக்கூட விழாக்கள் இப்படி பலதும் நடக்குது. வகுப்புக்கு போனால் குழுவகுப்புகளில் இருக்கிற பிள்ளைகளை விட குறைவான பிள்ளைகள் இருக்குது. அவங்களுக்கு படிப்பிக்க தொடங்கினால் zoom வகுப்பில் இருந்து படிப்பிக்கிற மாதிரி இருக்கு. மாகாணம் வேற பரீட்சை நேரசூசி போட்டிட்டு. 


சரி மேலதிக வகுப்பு காலமை போடுவம் என்றால் அதிலேயும் 6,7 தான் வருது. இது என்ன கொடுமை என்று நிர்வாகத்துக்கு சொன்னால்..........


நான்: ஏன்டா இழுக்கிறா?


அவன்: நீங்கள் பேப்பர் மார்க்கிங் என்று லீவு எடுக்கிறது, செமினார் என்று லீவு எடுக்கிறது, சொந்த லீவுகள் எடுக்கிறது பிறகு பிள்ளை வரேல்லை என்று வந்து நிக்கிறது. இப்படி என்னில பழி போடுறாங்கள் அண்ணா. 


அண்ணா நான் லீவால பிள்ளை இழந்த கல்வியை கொடுக்க தானே மேலதிக வகுப்பு எடுக்கிறன். இது ஏன் அவங்களுக்கு விளங்கேல்லை?


அண்ணா அத விட பெரிய கொடுமை என்ன என்றால் எங்கள் பாடசாலைக்கு விளையாட்டு பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் நியமிச்சு இருக்கு அதனால அவங்களுக்கு நாங்கள் பிள்ளைகளை காலை 6.15-7.15 வரைக்கும் கொடுக்கோனும் பின் நேரம் 3 மணிக்கு பிறகு குடுக்கோனும் உங்களுக்கு விரும்பினால் மதியம் 1.30-2.30 வரைக்கும் வகுப்பு எடுக்கலாம். காலமை வகுப்பு எடுக்கிறது என்றால் விளையாட்டுக்காரரோட கதைச்சு முடிவு எடுங்கோ என்று சொல்லினம். 


நான்: நீ அப்ப விளையாட்டுகாரரோட கதைச்சு வகுப்பு போடன். 


அவன்: அண்ணா நீ என்ன லூசு மாதிரி கதைக்கிறா. மேலை ஒருக்கால் திரும்ப வாசி. 7.30-1.30 நேரத்தில் பிள்ளைகள் வகுப்பில் இருந்தால் எதுக்கு மேலதிக வகுப்பு. அதுக்குள்ள எங்கள் நேரத்தை எடுக்கிறதால தானே நாங்கள் மேலதிக வகுப்பு எடுக்க வேண்டி இருக்கு. 


என்ன அண்ணா ஒன்றும் சொல்லாமல் இருக்கிறா?


நான்: சொன்னால் பேசுவாய், அது தான் பேசாமல் இருக்கிறேன். 


அவன்: பரவாயில்லை. சொல்லு அண்ணா?


நான்: அந்த மூளை செத்த நேரம் பி.ப 1.30-2.30 எடுக்க வேண்டியது தான். 


அவன்: அண்ணா என்று பார்க்கிறன். இல்லாட்டி வாய்க்க ஏதாவது வந்திடும்.....


அன்பான பாடசாலை நிர்வாகத்தினரே,


சமாந்தர வகுப்புகளில் 150 - 200 வரையான அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் இணைபாட விதான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் மாணவர்களினால் பாட அடைவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாக தெரியாது. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும். 


மாணவர்களை இணைபாட விதான செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காதவாறு உங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் செயற்பாடுகளால் அவர்கள் வகுப்பறைகளில் இழந்த கல்வியை மீட்டெடுக்க ஏதாவது மாற்று ஒழுங்குகளை செய்து கொடுங்கள். கிராம புற மாணவர்கள் பொருளாதார வசதியோ கல்வி பற்றிய விழிப்புணர்வோ இல்லாத பெற்றோரை கொண்டவர்கள். ஆகவே குறித்த மாணவர்களின் நலனில் நிர்வாகம் தான் அக்கறை செலுத்த வேண்டும். 


தினவரவு இடாப்பில் அவனுக்கு வரவு தான் இருக்கும். ஆனால் பயிற்சி கொப்பியில் அவனது பாடப்பரப்பு விடயங்கள் முழுமையாக இருக்காது. விடய உள்ளடக்கம் தெரியாதவனுக்கு கடைசி நேரங்களில் நீங்கள் கணக்கு காட்டுவதற்காக மேற்கொள்ளும் கருத்தரங்குகளால் எப்பயனும் கிடைக்காது. 


இந்த பொறுப்பற்ற நிர்வாக செயற்பாடுகள் உங்கள் ஓய்வுகால நின்மதியைக் கெடுக்கும் என்பதில் ஐயமில்லை!



Thursday, November 16, 2023

Thursday, July 29, 2021

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

 *ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???*


*(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்)*


இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை முன்வைக்கின்ற பலருக்கு ஆசிரியர்களின் கோரிக்கை/ பிரச்சினை என்னவென்றே தெரியாது. நான் அறிந்தமட்டில் அவர்களின் கோரிக்கை மிக நியாயமானதே! (சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்ட சில விடயங்களை வைத்தே நானும் அவர்களின் கோரிக்கை என்னவென்று ஓரளவு தெரிந்து கொண்டேன்.)


அவர்களின் பிரதான கோரிக்கை 23 வருடங்களாக (1997 முதல்) ஏற்படுத்தப்பட்ட சம்பள அளவுத்திட்ட முரண்பாட்டை நீக்குமாறு என்பதாகும். *(எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சம்பளத்தை அதிகரிக்கத்தான் போராடுகிறார்கள் என்று. ஆனால் உண்மை அவ்வாறில்லை. அவர்களுக்கு உரித்தானதைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்)* அரச தொழிலில் அவர்களின் தொழிற்துறை/ சேவைத் துறைக்கேற்ப அவர்களின் சம்பள அளவுத்திட்டங்கள் மாறுகின்றன. அதேவேளை குறிப்பிட்ட ஒரு தொழிலிலே அவர்களின் தரங்கள், தொழில் காலங்களுக்கு  ஏற்பவும் சம்பள அளவுத்திட்டங்கள் (Salary Scale) மாறுகின்றன. 1997 முதல் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு காரணமாக உண்மையாக அவர்கள் பெற வேண்டிய தொகையைவிட குறைவான ஒரு தொகையைத்தான் 23 வருடங்களாக பெற்று வருகிறார்கள்.


இதை இன்னும் சற்று விரிவாக கூறுவதாயின், நீங்கள் ஒரு வீட்டை / கடையை வாடகைக்கு 23 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு கொடுத்துள்ளீர்கள். அவர் பொருந்திய தொகையைவிட 10% குறைவாக கடந்த 23 வருடங்களாக உங்களுக்கு தருகிறார். அதேநேரம் வாடகைத்தொகையும் 23 வருடங்களாகவும் ஒரே தொகையாகவும் இருக்காது. அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப வாடகைத் தொகையையும் நீங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வீர்கள். எனவே 23 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் அதைக் கேட்காமல் சும்மா விட்டு விடுவீர்களாக?? (உங்களுக்கு வரவேண்டிய அந்த தொகை வாடகைத் தொகை அதிகரிப்பிற்கேற்ப(வாடகைத் தொகையின் 10%) அதிகரித்துக்கொண்டே செல்லும்). இவ்வாறான ஒரு நிலைதான் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


மேலுமொரு உதாரணம் கூறுவதாயின், நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை மாதாந்த சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில்/ கடையில் 23 வருடங்களுக்கு முன் இணைந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் முதலாளி பொருந்திய தொகையைவிட குறிப்பிட்ட வீதம் (உதாரணத்திற்கு 10% என எடுத்துக்கொள்வோம்) உங்களுக்கு குறைவாக தருகிறார். இவ்வாறு 23 வருடங்களாக நடப்பதை நீங்கள் சும்மா விட்டுவிடுவீர்களா???


மேலும் கணித்தலுடன் கூறுவதாயின் உங்களது ஆரம்ப சம்பளம் 20,000/- வுடன் 23 வருடங்களுக்கு முன் ஒரு தொழில் இணைந்து உள்ளீர்கள். அதேவேளை 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் சம்பளம் 5,000/- வினால் அதிகரிக்கின்றது எனவும் வைத்துக்கொள்வோம். அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உங்களுக்கு வரவேண்டிய சம்பளம் 10% குறைவாகத்தான் கிடைக்கின்றது என வைத்துக்கொள்வோம்.


முதல் 5 வருடங்களில் நீங்கள் இழக்கும் தொகை 2000 × 12× 5= 120,000/-


அடுத்த 5 வருடத்தில் 2500× 12×5 = 150,000/-


அடுத்த 5 வருடத்தில் 3000 × 12×5= 180,000/-


அடுத்த 5 வருடத்தில் 3500 × 12×5 = 210,000/-


இறுதி 3 வருடத்தில் 4000× 12×3= 144,000/-


ஆகவே 23 வருடங்களில் நீங்கள் இழக்கும் மொத்த தொகை (120,000 + 150,000 + 180,000 + 210,000 + 144,000 ) *804,000/-* 


இத்தொகையை சும்மா விட்டு விடுவீர்களா?? இப்ப சொல்லுங்கள் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானதா? இல்லையா??


மேலே காட்டிய கணக்கு ஒரு உதாரணத்திற்கே. அதைவிட கூடுதலான தொகையை ஒவ்வொரு ஆசிரியர்களும் இழந்துள்ளார்கள். அத்தொகை அவர்களின் தரங்கள், தொழில் கால அளவுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. மேற்படி சம்பள அளவுத்திட்ட முரண்பாடு காரணமாக தற்போது ஒவ்வொரு ஆசிரியர்களும் அதிபர்களும் அவர்களின் தரங்களுக்கு ஏற்ப தாம் பெறவேண்டிய தொகையை விட சுமார் 9,000 - 31,000/- இடைப்பட்ட ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் குறைவாக பெறுகிறார்கள். *(ஒவ்வொரு மாதமும் அவர்களின் அத்தொகையை 23 வருடங்களாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் சூரையாடியுள்ளது).* இந்த முரண்பாட்டை தான் நீக்குமாறு அவர்கள் வேண்டுகிறார்கள். *அதுவும் அவர்களுக்கு உரித்தான 23 வருடங்களாக சூரையாடப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தை தருமாறு அவர்கள் வேண்டவில்லை. மாறாக அடுத்த மாதத்திலிருந்து சரி இப்பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு உரித்தான சம்பளத்தை அடுத்த மாதம் தொடக்கம் சரியாக தருமாறுதான் வேண்டுகிறார்கள்.*


ஒரு ஆசிரியரின் FB பதிவொன்றிலிருந்து கிடைத்த தரவை மேலும் தெளிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.


அவ்வாசிரியர் 2011-08-19 ம் திகதி முதல் ஆசிரியராக நியமனம் பெற்றுள்ளார். அன்றிலிருந்து முதல் மூன்று வருடங்கள் (2014-08-19 வரை) ஒவ்வொரு மாதமும் 10,304/- குறைவாக கிடைத்துள்ளது. ஆகவே 3 வருடங்களில் அவர் இழந்த தொகை (3×12×10,304) *370,304/-*


2014-08-19 தொடக்கம் 2021-07-19 இம்மாதம் வரை 6 வருடங்களும் 11 மாதங்களும் ஒவ்வொரு மாதம் அவர் இழந்தது 14,315/- ஆகும். எனவே இவ் 83 மாதங்களில் அவர் இழந்த மொத்த தொகை (83× 14,315) *1,188,145/-*


ஆகவே அவருடைய நியமனம் முதல் இன்று வரை அரசாங்கங்கள் அவருக்கு வழங்க வேண்டிய அவர் இழந்த மொத்த தொகை *1,559,089/-* *(15 இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து எண்பத்து ஒன்பது ரூபா)*


அவ்வாசிரியர் அரசாங்கத்திடம் அந்த 15 இலட்சத்தை கேட்கவில்லை. அடுத்த மாதம் தொடக்கம் அவருக்கு உரித்தான 14,315/- வை சம்பளத்துடன் சேர்க்குமாறே!!


*இவற்றை முழுமையாக வாசித்து விளங்கியவர்கள் ஆசிரியர்களின் போராட்டத்தை இனி கொச்சைப்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.


அவர்கள் 23 வருடங்களாக இதற்காக போராடுகிறார்கள். மாறி மாறி வரும் அரசாங்கங்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். என்னுடைய பார்வையில் இனியும் அவர்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. அவர்கள் 23 வருடங்களாக ஏமாறி அனுபவம் பெற்றுள்ளார்கள்.


சிலர் இச்சந்தர்ப்பம் போராட பொருத்தமற்றது என்றும் இன்னும் சிலர் ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஓய்வு நேரம் அதிகமென்றும் ஆசிரிய தொழிலை கேவலப்படுத்துகிறார்கள். அதற்கான விரிவான பதிலை அடுத்த ஆக்கமொன்றில் எழுத முயற்சிக்கிறேன்.


இஃது

ஆசிரியர்களின் உன்னத சேவையை உணர்ந்த/ பெற்ற வெற்றியாளன்.

COPIED