Saturday, July 2, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 5)

வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?


அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?


சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?


ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?

புரியவில்லை அவனுக்கு.

முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.


மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.


சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?


கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.


தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்


காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே

அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.


பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.

தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.


தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.

களைப்பு

கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.


என்ன இனியன்,
கண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா?
இல்லை
கண்ணில் கடித்த கொசுவை
அங்கேயே நசுக்கிவிட்டாயா ?

சிரித்தபடி கேட்டார்கள் நண்பர்கள் 

அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.  


அவளது தொலைபேசி அழைப்பு
வரவே
அவனது முகம் கேள்விக்குறி 
ஆகியது
அவளே பேச தொடங்கினாள்......

                                                                                             பார்த்தியின் பதிவு தொடரும்.....
                                                                                      

Friday, July 1, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 4)


அவள் பதில்...


வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்


ஏன் என்னைப் பிடிக்கலியா ?

மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்


பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!


ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்

 
ஆழமாய் யோசித்து...
அழுத்தமாய் சொன்னாள்.
இல்லை !!!

காதல் எனக்கு பிடிக்கும்.
நண்பனை போய்.... என்று இழுத்தாள் ..!

ஊரிலுள்ள எல்லா
காதலரும் சேர்ந்தால் 
மகிழ்கிறாய் ...
நானும் நீயும் சேர்வதை
மட்டும் ஏன் நட்பு என்று மறுக்கிறாய் 

நான் சொல்ல்வது 
உனக்கு புரியவில்லையா 
நான் எவ்வாறு புரிய வைப்பது ..


தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.


நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.

ஆமாம்.

ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
மௌனமானாள் சுடர் விழி.

வேறு வார்த்தைகள் 
அவன் நாவிலிருந்து 
வெளிவர மறுக்க 
மௌனதுடனேயே 
மௌனமாகியது தொலைபேசி ........

                                                           
                                                                                          பார்த்தியின் பதிவு தொடரும்.....
                                                      

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 3)

ஏதேதோ எதிர்பார்த்தான்
என்ன பழக்கம் என்றாள் ..


சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?


உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
ஒரு வருடம்  தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?



நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்


நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!


உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.

அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.


சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்


கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.


விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.


நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.


நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.

இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.


நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.

மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.


இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்


என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை  வேண்டியிருப்பேன்

ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.


சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.


எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.


சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!

அவள் பதில்...

                                                                பார்த்தியின் பதிவு தொடரும்.....

Thursday, June 30, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 2)

நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்

தொலை பேசி அலையில் அவன் மனம் திறந்தான்.


உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்


தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.


புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.


விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.


நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் .


மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.

சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் ஒரு முனை நின்றான்.

                                                           பார்த்தியின் பதிவு தொடரும்.....

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 1)

இது காதல்

அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
இரவு பகல் பாராது 
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.


அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.
 

மலையில் பறந்து திரியும் ஒரு
நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !


கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.


கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது

கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.

மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.


அவளோடு நட்புச் சுவர்கட்ட
அதுவே அவனுக்கு 
சீனப் பெருச்சுவராய்
இருக்கும் என்று
அவன் நினைக்கவில்லை 

பேசினான்.
பேசினாள்.

காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.


அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!

                                                          பார்த்தியின் பதிவு தொடரும்.....

Wednesday, June 29, 2011

இரண்டுமனம் வேண்டும்...


பார்ப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால்
பார்த்துவிடலாம்......
அவளை 
மணப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால்
மணந்துவிடலாம்......
ஆனால்
இருப்பதோ “ஒரு மனம்”
  நான்
என் செய்வேன்.............

இரண்டு மனம் வேண்டும்..
இறைவனிடம் கேட்டேன்..
அவளுக்காக ஒன்று...
இவளுக்காக ஒன்று...
இரண்டு மனம் வேண்டும்........

வரவும் செலவும் இரண்டானால்...
வந்ததும் போவதும் இரண்டானால்...
புரிதலும் பகிர்தலும் இரண்டானால்...
இருதயம் ஒன்று போதாதே...
இரண்டு மனம் வேண்டும்...

விழிகளின் தண்டனை காட்சிவழி...
காட்சியின் தண்டனை நினைப்புவழி....
 நினைப்பதன் தண்டனை அடைதல்வழி...
அடைந்ததன் பிறகோ என்னவழி...????
இரண்டு மனம் வேண்டும்.....
                                                      -சுகானன்.
இதன் உண்மையான வடிவம்......


குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் – அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் – ஆனால்
இருப்பதோ ஒரு மனம்…நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று (2)
(இரண்டு)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால் (2)
உறவும் பிரிவும் இரண்டானால் (2)
உள்ளம் ஒன்று போதாதே!
(இரண்டு)
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி (2)
காதலின் தண்டனை கடவுள் வழி (2)
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?
(இரண்டு)
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்

திரைப்படம்: வசந்த மாளிகை

Monday, June 27, 2011

இனிவரும் காலத்தில் என் தாய் பூமி என்ன ஆகுமோ..????


அம்மா :- சைலேஷ்!! என்ன செய்றாய் ? வெளிக்கிடன்...நேரம் ஆகுது...

மகன் :- பொறுங்கம்மா ...மாற சீன் ஒண்டு...என்ர Facebook ல வெள்ளைக்காரி போல Friend Request பண்ணி இருக்கு...( பிஞ்சில பழுக்க ஆசைபடுது போல...) 

மகள் :- ஐயோ ! இல்லையடா தம்பி ,உது என்ர Friend (கடவுளே !இப்படியும் சந்தேகம் வர தொடங்கிட்டா) 

மகள் :- அம்மா ! நான் எந்த Dress போடுற...தோய்ச்சுப் போட்ட அந்த Black Denim இன்னும் வடிவா காயல்ல.....

அம்மா :- ஏன் ? அந்த White Denim ஐ போடன்...இந்த Black T Shirt கு நல்லா இருக்கும் (அது அம்மாவா இல்ல......??)

அப்பா :- என்ன தாயும் மகளும் ஒரே மாதிரி Dress , ஒரே மாதிரி Hair Style..பின்னால பாக்க வித்தியாசமே தெரியல...(கவனம் அய்யா!!! உமக்கே வித்தியாசம் தெரியாட்டி...)
அம்மா :- போங்க நீங்க வேற ...நீங்க தானே சொன்னிங்க Straight பண்ணிணா நல்ல இருக்கும் எண்டு...(முடிய சொல்றாங்க போல....)
அப்பா :- நான் எங்கை சொன்னான்...நீதானே திரேசியாக்கு நல்லா இருக்கு நானும் செய்யட்டா எண்டு கேட்டாய்... பிறகு....

மகன் :- சரி சரி... அம்மாக்கும் அக்காக்கும் வடிவாதான் இருக்கு ...சரி போவம் நாங்க...

அப்பா :- ம்...சரி ...எல்லாரும் உங்க Phone , IC எல்லாம் எடுத்தாசா ? (அட இந்த IC கொண்டு போறத இன்னும் விடல்லயா)

அவ்வாறே பேசிக்கொண்டு  பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கின்றனர்.

அம்மா :- என்ன திரேசியா Phone ஐ அமத்திக் கொண்டே வாராய் ..???

மகன் :- ஓம் அம்மா இவ எப்பவும் Phone தான் (பொறு தம்பி பொறு...)

மகள் :- போடா பிசு ...இல்லை அம்மா நான் இண்டைக்கு Class வரமாட்டன் எண்டு Sir கு SMS போடுறன் அம்மா...

அப்பா :- நீங்க போங்க ...நான் Cargills ல போய் Bill கட்டிட்டு வாறான்.

மகன் :-அப்பா என்ர Phone கும் கட்டிவிடுங்கபா ...


அவ்வாறே பேசியபடி பஸ்ஸுக்காக காத்திருக்கின்றார்கள்.

மகன் :- அப்பா "யாப்பனய" எண்டு Board போட்டு பஸ் ஒண்டு வருது போல ஏறுவம்.

அம்மா:- ஓமப்பா நிண்டு பாக்கேலா ஏறுவம்.

அனைவரும் அந்த வண்டியில் ஏறுகின்றனர்.கடைசி ஆசனத்தில் திரேசியாவின் நண்பி தமிழரசி தன்னுடைய காதலன் அப்துல்லாவுடன் இருப்பதைக் திரேசியா காண்கின்றாள்.

மகள் :-அம்மா இதுதான் நான் சொன்னன் அந்த Girl தமிழரசி , அது அவட BoyFriend அப்துல்லா...( அவளுக்கு தாடிவைச்ச ஆம்பிளயல பிடிக்கும் போல...)

அம்மா:- எங்கை போறிங்க பிள்ளை ( கஷ்ரப்பட்டு கடைசி ஆசனம் பிடிச்சு வர நீங்க வேற ....முன்னுக்கு போங்க அம்மா)

தமிழரசி:- படம் பாக்க போறம் ( எங்க போனாலும் ஒண்டாத்தானா... )

மகள் :- நாங்கள் கசூரினா Beach கு போறம்

தமிழரசி:- நான் Night உனக்கு அடிச்சன் உன்ர Phone Waiting ல இருந்திச்சு.

மகள்:- மெல்லமா கதை அம்மா இருக்கா...நான் பிறகு சொல்றன்..


அவ்வாறே பஸ் செல்கின்றது.அப்பா நடத்துனரிடம் பஸ் Radio ஐ போடும் படி கேக்கின்றார். நடத்துனரும் Radio ஐ இயக்குகின்றார்.

அப்பா :- என்ன தம்பி ..ஐயோ இவங்க "முதல் தரம்" "முதல் தரம்" எண்டு சொல்லியே உயிரை எடுத்திடுவாங்க....

மகன் :- அந்த வெற்றில விடுங்க லோஷன் Uncle ர மகன் செய்யுற நிகழ்ச்சி இப்ப ....

நடத்துனர்:- இல்லை தம்பி ...அவங்க எனக்கு ஒரு DVD Player தந்திருக்காங்க..அந்த நன்றிக்கடன் வேண்டாமா..

அப்பா :- அப்ப நன்றிக்கடன் மட்டும் தானா இது ...ம்...


அவ்வாறே பஸ் போகும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது.மக்கள் கூட்டம் குவிந்து வேடிக்கை பாக்கின்றது

அப்பா :- என்ன நடந்தது ?

நடத்துனர் :- அது ஏதோ Accident...மாத்தறை ஆள் யாரோ செத்திட்டாங்களாம்.

பஸ் தொடர்ந்து செல்கிறது. நகரை அண்மிக்கும் போது மீண்டும் வாகன நெரிசல்...

நடத்துனர் :- அது அவங்கட பெரெரா போகுது அதான்...( புத்த பகவனே ! அரோகரா...)

இது இவ்வாறு இருக்க மகன் சத்தம் போடாம தன்னுடைய வேலையை பாத்துக்கொண்டிருந்தான், அவன் தீடீரெண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து ஏதோ எழுதி யாருக்கும் தெரியாம இரண்டு பத்து ரூபாய் தாளை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுக்கின்றான். அவளும் அதற்கு பதிலாக ஒரு இருபது ரூபாய் எடுத்து எதோ எழுதிக் கொடுக்கின்றாள். ( அட விடுங்கப்பா... காசு மாத்தி இருக்காங்க போல)

யாழ் நகரை வந்தடைகின்றனர்.



மகன் :- அம்மா தண்ணி விடாய்குது. Kiri Packet ஒண்டு வாங்கி தாங்க....

அம்மா :- பொறு அந்த முஸ்லிம்  hotelல இருக்கும் குடிப்பம் ....
மகள் :- அப்பா அந்த English பட DVD வாங்கி போவமா ....???

அப்பா:- அங்க வாங்கி வைச்சிருக்கிற பாக்கவே நேரம் இல்லை...( நல்ல அப்பன்...)

மகன் :- அம்மா அங்கை , என்ர Class ல படிக்கிற கஷ்ரின் போறான்.

அம்மா :- பிறகு பாப்பம் ..வா ..நாங்க அடுத்த பஸ் எடுப்பம்.

அனைவரும் காரைநகர் பஸ் தரிப்பிடம் சென்று ஏறுகின்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் காரைநகரை அடைந்து பிறகு நடந்து சென்று கசூர்னா கடற்கரையை அடைகின்றனர். விடுமுறையோ என்னவோ சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது

அம்மாவும் அப்பாவும் அமர்ந்தவாறே தம் பழைய காதல் நினைவுகளை மீட்டுகின்றனர். மகனும் மகளும் இயற்கையை ரசித்தவாறு நடக்கின்றனர்.



அப்பா:- என்னப்பா ! நாங்க அப்ப அந்த laneல தானே நிண்டு  கதைச்சம்.. இப்ப பாருங்க...

அம்மா:- ம்...அதுவும் எவளவு பயந்து பயந்து...

அப்பா:- (அப்பா, அம்மாவின் கூந்தலை தடவியபடியே ) கள்ளி உனக்கு எப்பவும் பயந்தான்...

அம்மா :- ( அம்மா, மகன் , மகள் எங்கே என கடைக்கண்களால் தேடியவாறே) என்னப்பா இதுகள் இரண்டும் எங்கயோ போட்டுதுகள் போல

அப்பா:- இப்ப ஏன் உனக்கு அதுகளை ...ஆறுதலாக வரட்டும்....

மகனும் மகளும் ஒரு புறம் கடலைப் பார்ப்பதும் கடைக்கண்களால் சூழலை நோக்குவதுமாக ......காதலர்கள் குடைக்கம்பிகளை எண்ணியபடியாக.......வியாபாரிகள் சிங்கள தமிழ் மொழிகளில் கத்திகொண்டே உலா வந்தனர்...தனியாக இருந்த திரேசியா ஐ அவதானித்த ஒரு வியாபாரி...

வியாபாரி:- தங்கச்சி வதுரு போத்தல் வேணுமா...ஏன் தனிய ஈக்கிறிங்க ...

திரேசியா:-(தன்னை சரி செய்தவாறே..)நான் தனிய இருந்தா உங்களிற்கு என்ன ?

வியாபாரி:- இல்லை தங்கச்சி என்ர போன் ல சல்லி இல்லை ... அவசரமாக ஒரு SMS போடணும் அதான்...

திரேசியா:- அதுக்கென்ன போட்டுட்டு தாங்க .. ( அதுதானே இதில என்ன இருக்கு.... )

இனி சொல்லவேண்டுமா அவன் திரேசியாவின் இலக்கத்தை எடுத்திட்டான். இனி என்ன இரவு ஆரம்பிக்க கூடும்.

பின்னுக்கு ஒட்டி இருந்த மணலை தட்டியவாறே அம்மாவும் அப்பாவும் மகனையும் மகளையும் தேடுகின்றனர்.

மகன் சத்தம் போடாம இருந்து Phone Camera ஐ Zoom பண்ணி பண்ணி ஏதொ எடுக்கின்றான் ( அட விடுங்கப்பா ....இயற்கையை ரசிச்சு படம் பிடிக்கிறான்)

மகள் போனையும் அமத்தியபடியே அக்கம் பக்கம் பார்வைகளை விட்டபடியே இருந்தாள் .அம்மா அப்பா மகன் மகள் மீண்டும் இணைகின்றனர்.

மகன்:- எங்கை அம்மா இவளவு நேரமும் இருந்திங்க...
அம்மா:- இல்லையடா ...அப்பாக்கு தலைக்கே ஒரே பேன் ஆக இருந்திச்சா அதான் பாத்திட்டு இருந்தன் ..

மகன் :-(மனசுக்குள் நினைக்கின்றான்) ஓகோ அப்படியா ....அப்ப இவளவு நேரமும் நான் படம் பிடிச்சது பேன் பாத்துக்கொண்டிருந்தவங்களைத்தானா...???
அப்பா :- சரி நேரம் ஆகுது போவம் வாங்க .

அம்மா :- போகேக்க கடைல சாப்பாடு எடுத்திட்டு போவம் ..இனி யாரு சமைக்கிற போய் (ம்...நல்ல முடிவு அம்மா)

அனைவரும் பஸ்ஸில் ஏறி யாழ் நகரை அடைந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வீடு செல்கின்றனர்...
வாங்கி வந்த சாப்பாட்டை அனைவரும் கூடி சாப்பிடுகின்றனர். ஒரு புது இலக்கதிலிருந்து திரேசியாவுக்கு Call அடிக்கின்றது.அவள் Cut பண்ணியவாறே சாப்பிட்டு முடிக்கின்றாள் . சாப்பிட்டு முடித்ததும் தம்பியும் அந்த இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்தவாறே படுக்க தன் அறைக்கு செல்கின்றான். திரேசியா புது இலக்கத்துக்கு "Who R U " எண்டு அனுப்பியவாறே படுக்க.... இல்லை இல்லை.... படுக்கை அறைக்கு செல்கின்றாள்.... அப்ப அம்மாவும் அப்பாவும் ????? ( ஐயோ வாயை மூடிட்டு வாசியுங்க ) .....அவங்க பாவம் Panadol ஐ போட்டவாறே படுக்க செல்கின்றனர்..

காலங்கள் ஓடினாலும் நவீனத்துவம் ஆகினாலும் மாற்றம் அடையக் கூடாத காரணிகள் சில உண்டு.. அதில் கலாச்சாரம் மிக முக்கியமானது.. நீ கெட்டால் பரவாயில்லை உன்னைப் பார்த்து மற்றவன் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்..

 எவ்வளவு தான் நாகரிகம் அடைந்தாலும் அம்மா..!! என்ற உறவு அம்மா தானே....
இதை எவ்வாறு மாற்ற முடியாதோ தமிழ்னுக்கு என்ற ஓர் கலாச்சாரம் உண்டு. அதை கடைப்பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை..தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்..

மகன் , தந்தைக்கிடையேயான உரையாடல்...

அப்பா :- என்னடா யோசிக்கிறா...???

மகன் :- இப்ப உங்கள அப்பா என்று கூப்பிடிறன்.... நானும் உங்க அளவு வளர்ந்தாஉங்கள   எப்பிடி கூப்பிடிறது...?????   

சிந்தனைகள் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்...
அதற்காக இப்படியா......?????

                                                          - இணையத்தேடல்களுடன் எனது பதிப்பும்.

பிரமுகர் வீட்டுச் செருப்புக்குக் கூட-பேட்டியளிக்கும் தகுதிகள் உண்டு!

செருப்புடன் ஒரு பேட்டி...
# உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும் 
   உரைக்க முடியுமா??  

உழைப்பிற்க்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!மனிதர்களின்           
பாதங்களுக்குப் பயண வாகனங்கள் 

கடைவீதிகளில் காட்டிக் கொடுக்கக்
‘காலணி’ ஆதிக்கத்தால் கைதுசெய்யப்
படுகிறோம்!

உள்ளே ஒருவர்
இருக்குறாரா இல்லையா என்று அறிவுக்கும்
பித்தளை போர்டுகள் பின்னால் வந்தவை!
நாங்களோ 
வெகு காலமாக அந்த
வேலையைச் செய்கிறோம்!

காலடியில் மிதிபட்டுக் காலமெல்லாம்
உழைத்தாலும்
வாசலில் மட்டுமே வாசம் புரிகிறோம்..
உழைப்பதற்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!

#  காலில் மிதிபடுவதாய்க் கண்ணீர்
  வடிக்கிறீர்களே-உங்களைக்
  கைகளில் தூக்கி நாங்கள்
  கெளரவிப்ப தில்லையா?? 

சில சமயங்களில்...
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது
மீண்டும் எங்களை மிதிப்பதற்காகவே!

# போகட்டும்....
  ஒப்பற்ற உழைப்புக்கு உங்களைத்தானே
  உவமானம் சொல்கின்றோம்...

உவமானங்களால் மட்டுமே எங்கள் 
அவமானங்கள் அழிந்துவிடுவதில்லை
அதோடு
இழிவு படுத்துவதும் எங்களைத்தானே
’எடுத்து’க் காட்டுகிறீர்கள்...

# சரி....சரி....
குறைகளைப் பற்றி உங்கள் இனத்தவர்
கூடிப் பேசிடலாமே.......??

எவ்வித முன்னறிவுப்புமின்றி
எங்கள் கூட்டங்களைக்கூட 
நீங்களே ஏற்பாடு செய்துவிட்டு

தீர்மானம் நிறைவேற்றும் முன்
திடீரென்று கலைத்து  விடுகிறீர்களே!

# நீங்கள் கூட்டம் போடும்போது
   பார்வையாளர்கள் பங்கு கொள்வதுண்டா??

கோவில் வாசலில்....வைபவ நெரிசலில்..
நாங்கள் கூட்டம் போடும்போது
எங்களின் கன்னிமை கழியாத புதியவர்களை
சில கொள்ளைக்காரர்கள்
நோட்டம் போடுகிறார்கள்.

# தனியாக உங்களுக்கென்று
   தத்துவப் பார்வை உண்டா??  

உண்டு..
சருகை மிதித்தால் சப்திக்கும் நாங்கள்
மலரை மிதிக்கும் போது மெளனம் சாதிக்கின்றோம்.

# வாங்கிய புதிதில் காலைக் கடிக்கும்
  வழக்கம் எதற்காக??

எங்களுக்கும் ரோஸம் இருக்கின்ற தென்பதைக்
காட்டிக் கொள்ளவே
ஆரம்பத்தில் கொஞ்சம் கடித்துப் பார்ப்போம்.

தொடர்ந்து போராடும் 
‘தோல்’வலிமை யற்றதால்
பாதம் படப் படப் பணிந்து விடுகிறோம்!

# திடீரென அறுந்துபோய் நடுவீதியில்
  எங்களைத் திண்டாட வைப்பது ஏன்??

நாங்கள் 
ஒத்துழியாமை இயக்கம்
தொடங்கும் போதுதான்
தெருவோரத் தொழிலாளியின்
வயிற்றுப் பாட்டுக்கு வழி பிறக்கின்றது!

# பழசாகிப் போனதெனும் காரணம் காட்டி
   உங்களை நாங்கள் ஒதுக்கி விடும்போது....??

உங்களால் ஒதுக்கப்பட்டவர்
எங்களை
உபயோகித்துக் கொள்வர்!

# இனிய நினைவுகள் வாழ்வில் ஏதேனும்??

நாணத்தில் கவிழும் தாமரைக் கண்கள்
உங்களைச் சந்திக்கும் முன்பாக 
எங்களைத்தான் சந்திக்கின்றன!
# தீவிரமாக எதைப்பற்றியாவது நீங்கள்
 சிந்திப்பதுண்டா??

உண்டு!
சில தேசங்களையும்
சில ஆட்சிகளையும்
பார்க்கும்போது
மீண்டும் நாங்களே
சிம்மாசனம்
ஏறிவிடலாமா
என்று
யோசிப்பதுண்டு!!!