செருப்புடன் ஒரு பேட்டி...
# உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும்
உரைக்க முடியுமா??
உழைப்பிற்க்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!மனிதர்களின்
பாதங்களுக்குப் பயண வாகனங்கள்
கடைவீதிகளில் காட்டிக் கொடுக்கக்
‘காலணி’ ஆதிக்கத்தால் கைதுசெய்யப்
படுகிறோம்!
உள்ளே ஒருவர்
இருக்குறாரா இல்லையா என்று அறிவுக்கும்
பித்தளை போர்டுகள் பின்னால் வந்தவை!
நாங்களோ
வெகு காலமாக அந்த
வேலையைச் செய்கிறோம்!
காலடியில் மிதிபட்டுக் காலமெல்லாம்
உழைத்தாலும்
வாசலில் மட்டுமே வாசம் புரிகிறோம்..
உழைப்பதற்காகவே விலைக்கு வாங்கப்படும்
அடிமைகள் நாங்கள்!
# காலில் மிதிபடுவதாய்க் கண்ணீர்
வடிக்கிறீர்களே-உங்களைக்
கைகளில் தூக்கி நாங்கள்
கெளரவிப்ப தில்லையா??
சில சமயங்களில்...
கைகளில் தூக்கிக் காப்பாற்றி வைப்பது
மீண்டும் எங்களை மிதிப்பதற்காகவே!
# போகட்டும்....
ஒப்பற்ற உழைப்புக்கு உங்களைத்தானே
உவமானம் சொல்கின்றோம்...
உவமானங்களால் மட்டுமே எங்கள்
அவமானங்கள் அழிந்துவிடுவதில்லை
அதோடு
இழிவு படுத்துவதும் எங்களைத்தானே
’எடுத்து’க் காட்டுகிறீர்கள்...
# சரி....சரி....
குறைகளைப் பற்றி உங்கள் இனத்தவர்
கூடிப் பேசிடலாமே.......??
எவ்வித முன்னறிவுப்புமின்றி
எங்கள் கூட்டங்களைக்கூட
நீங்களே ஏற்பாடு செய்துவிட்டு
தீர்மானம் நிறைவேற்றும் முன்
திடீரென்று கலைத்து விடுகிறீர்களே!
# நீங்கள் கூட்டம் போடும்போது
பார்வையாளர்கள் பங்கு கொள்வதுண்டா??
கோவில் வாசலில்....வைபவ நெரிசலில்..
நாங்கள் கூட்டம் போடும்போது
எங்களின் கன்னிமை கழியாத புதியவர்களை
சில கொள்ளைக்காரர்கள்
நோட்டம் போடுகிறார்கள்.
# தனியாக உங்களுக்கென்று
தத்துவப் பார்வை உண்டா??
உண்டு..
சருகை மிதித்தால் சப்திக்கும் நாங்கள்
மலரை மிதிக்கும் போது மெளனம் சாதிக்கின்றோம்.
# வாங்கிய புதிதில் காலைக் கடிக்கும்
வழக்கம் எதற்காக??
எங்களுக்கும் ரோஸம் இருக்கின்ற தென்பதைக்
காட்டிக் கொள்ளவே
ஆரம்பத்தில் கொஞ்சம் கடித்துப் பார்ப்போம்.
தொடர்ந்து போராடும்
‘தோல்’வலிமை யற்றதால்
பாதம் படப் படப் பணிந்து விடுகிறோம்!
# திடீரென அறுந்துபோய் நடுவீதியில்
எங்களைத் திண்டாட வைப்பது ஏன்??
நாங்கள்
ஒத்துழியாமை இயக்கம்
தொடங்கும் போதுதான்
தெருவோரத் தொழிலாளியின்
வயிற்றுப் பாட்டுக்கு வழி பிறக்கின்றது!
# பழசாகிப் போனதெனும் காரணம் காட்டி
உங்களை நாங்கள் ஒதுக்கி விடும்போது....??
உங்களால் ஒதுக்கப்பட்டவர்
எங்களை
உபயோகித்துக் கொள்வர்!
# இனிய நினைவுகள் வாழ்வில் ஏதேனும்??
நாணத்தில் கவிழும் தாமரைக் கண்கள்
உங்களைச் சந்திக்கும் முன்பாக
எங்களைத்தான் சந்திக்கின்றன!
# தீவிரமாக எதைப்பற்றியாவது நீங்கள்
சிந்திப்பதுண்டா??
உண்டு!
சில தேசங்களையும்
சில ஆட்சிகளையும்
பார்க்கும்போது
மீண்டும் நாங்களே
சிம்மாசனம்
ஏறிவிடலாமா
என்று
யோசிப்பதுண்டு!!!
No comments:
Post a Comment