Wednesday, March 15, 2017

இன்டைக்கு ரீமாம்....!!!

அன்று காலை பாடசாலை வழமைக்கு மாறாக பரபரப்பாக தொடங்கிவிட்டது. காரணம் அந்த வெள்ளை வானும் அதிலிருந்து இறங்கிய ஆட்களும். பல குரல்கள் அன்று மட்டும் ஓங்கியொலிக்க தொடர்ச்சியாக கேட்டு பழக்கப்பட்ட குரல்கள் ஸ்தம்பித்து போயிருந்ததை அவதானித்த ஓரளவு அனுபவம் உள்ள மாணவர்கள் தமக்குள் சிரிக்க ஏனைய இளசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

என்றும் நடைபெறுவது போல் அன்றும் காலைநேர சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக அனைவரும் தயாராகின்றார்கள்.  வகுப்பாசிரியர்கள் வகுப்பிற்கு செல்ல அவருக்கு பின்னால் மேலும் ஒருவர் கையில் சில காகிதாதிகளையும் கொண்டு உள்நுழைகின்றார். நாகரிகம் அறிந்த குழந்தைகள் இருவருக்கும் தமது மரியாதையையினை அறியத்தருகிறார்கள். 

ஆனால் பல மாணவர்கள்களின் மனதிற்குள் என்றும் இல்லாத சலனத்தையும் சில மாணவர்கள் சாதாரணமாக தமது செயற்பாடுகளை செய்துகொண்டிருப்பதையும் அவதானித்த ஆசிரியர், பிரச்சனையையும் ஊகித்துக்கொள்கிறார். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காண்பவரை எல்லோரும் எவ்வாறு ஞாபகம் கொள்வார்கள். 

மூன்றாம் பாடவேளையை தொடர்ந்து எட்டு பைல்களையும் அதனுடன் தொடர்புபட்ட ஆசிரியர்களையும் வரவழைத்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட திருவிழாவில் தொலைந்த பிள்ளைகள் போல எதிர்காலத்தை செதுக்குபவர்கள் நிகழ்காலத்தில் ஒடுங்கி நிற்பதை காணமுடிந்தது. (பாவம் அவர்கள், என்ன தான் செய்வார்கள் ? பிழைகளை மட்டுமே பிடிக்க வந்தவர்களிடம் என்ன தான் செய்வது. )

இறுதியில் பாடசாலை மாணவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் அன்றைய நாளின் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற இருந்தன. அதாவது உயர்மட்ட குழுவினர்களாக கருதப்படுபவர்களிற்கும் கீழ்மட்ட ஆசியர்களுக்கும் இடையிலான சொல்லாடல் களம் தொடங்கியது. ஆனால் அங்கு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வளங்கி நெறிப்படுத்த வேண்டியவர்கள் குறைந்த ஆலோசனையையும் கூடியளவு குறைகூறல்களையுமே மேற்கொண்டனர். ஆனால், அதே கனவான்களே ஆசிரியர்களிடம்,  "மாணவர்களை குறைகூறாதீர்கள்!, ஆலோசனைகள் அதிகம் வழங்குங்கள்" என கூறியுள்ளனராம். 

ஆலோசனைகளை தொடர்ந்து அன்றைய நாயகனின் உரைக்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். தன் இருக்கையில் இருந்து எழும்பிய அந்த உருவம் எந்த ஒரு விழிப்பையும் யாருக்கும் வழங்காமல் நேரடியாக விடயத்துக்குள்ளேயே வந்தது. வீட்டிலிருந்து மனப்பாடம் செய்து வந்த அனைத்தையும் அப்படியே ஒப்புவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து. இருந்த அந்த உருவம் ஆசிரியர்களிடம் இருந்து வினாக்களை எதிர்பார்த்தது. அதுவரை மௌனத்தில் இருந்த ஆசியர்கள் தமது மௌனத்தைக் கலைக்க முற்பட்டவுடன் தமது கள்ளத்தனங்களும், ஓரவஞ்சகங்களும், கால்ப்புணர்ச்சியும் பிடிபட்டுவிடும் என்ற பீதியில், காலை 7.00  மணியில் இருந்து  மதியம் 2.30 மணிவரை ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை சமூகத்திற்கு கூட நன்றி சொல்ல நேரமில்லாமல் வெள்ளை வானிலேயே சென்றுவிட்டது. 

1. இந்த செயற்பாடு தொடர்பான சரியான நோக்கம் தான் என்ன?
2. வருடம் ஒருமுறை மட்டும் இவ்வாறு குறைகூறிச் செல்வதனால் கிடைக்கும் இலாபம் தான் என்ன?
3. இந்த வெளிவாரி மதிப்பீடு என்ற
தளத்தை பெரும்பாலான உயர்அதிகாரிகள் தமது அதிகாரத்தையும், கால்ப்புணர்ச்சிகளையும் காட்டும் தளமாகப் பயன்படுத்தப்படுவது ஏன்?
3. இந்த செயற்பாட்டினை நோக்குகையில் , வெளிவாரி மதிப்பீடு என்ற என்னக்கருவின் தேர்ச்சியினை அதிகாரிகளும் சரி, ஆசிரியர்களும் சரி அடையவில்லை என்றே தோன்றுகிறது.
4. வழிகாட்டல்களை வழங்க வேண்டிய அதிகாரிகளே குறிப்பிட்ட தேர்ச்சிகளை அடையாது இருந்தால் அவர்களின் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களின் நிலை ?????
5. ஒரு நிறுவனத்தின் கீழே வேலை செய்பவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டியது அந் நிறுவனத்தின் கடமையாகும்.
6. பாடசாலைச் சமூகம் வலயக் கல்விப் பணிமனைகள் எதிர்பார்க்கும் இலக்கினை அடையாதவிடத்து அதற்கான ஆலோசனை வழிகாட்டலை வழங்க வேண்டியது அதன் கடமையாகும். 
7. மாணவர்களை கணிப்பிட்டீர்களா? மதிப்பிட்டீர்களா? அவற்றிற்கான பின்னூட்டல்களை வழங்கினீர்களா? எனக் குடைபவர்கள் தமது மதிப்பீட்டிற்கான பின்னூட்டல்களை எப்போது வழங்குவார்கள்.
8. அவ்வாறு பின்னூட்டல்கள் எதுவும் செய்யாது மீண்டும் வந்து குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
9. அவ்வாறு பின்னூட்டல்கள் வழங்க தேவை இல்லை எனின் எதற்காக ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏச வேண்டும்?
இன்னும் பல கேள்விகள் உள்ளன. 

குறைகள் கூறியும் காட்டிக் கொடுப்புக்களை செய்தும் அழிந்து கொண்டிருக்கும் எம் இனம் கல்விப் புலத்திலும் தன் கீழ்த்தரமான செயல்களை செய்து வருவது வேதனையை தருகிறது. அன்று யுத்தத்தில் இழந்த எம் பிள்ளைகளை இன்று பலரின் அசமந்த போக்குகளால் அறிவற்றவர்களாக்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வே அதிகமாகவுள்ளது. 





No comments:

Post a Comment