`உலகம் யாவையும்` என்று கம்பன் பாடிய இராமாயணத்தில் கடவுள் வாழ்த்து ஆரம்பமாகிறது. இந்த வரிக்கு இரண்டு பொருள் கொள்ள முடியும். உலகம் என்பது உலகில் உள்ள சகல உயிரினங்களையும் குறித்தது என்று கொண்டு, பலகோடி உயிர்கள் யாவையும் `கடவுள் இருப்பு பெற்றன... அல்லது உண்டாயின` என்று பொருள் கொள்ளலாம்.
அதேசமயம், `உலகம் யாவையும்` என்பதை அண்ட வெளியில் உள்ள பல்வேறு உலகங்களையும் என்று அர்த்தம் செய்து, `பலப்பல உலகங்கள்` கடவுளால் படைத்து, காத்து, திருத்தப்படுகின்றன என்றும் பொருள் சொல்லலாம். உலகம் பலப்பல உண்டு என்பது அண்மைக்கால விஞ்ஞான வெளிச்சம். ஆனால் உள்ளொளி மிக்க கம்பன் போகிற போக்கில் அதைச் சொல்லி விட்டார். பலப்பல உலகங்கள் உண்டு என்பதை இரணியன் வதைப்படலத்திலும் கம்பன் பாடியிருக்கிறார்.
விஞ்ஞானி ஆராய்ந்து, படாத பாடுபட்டு, ஏகப்பட்ட சான்றுகளை எடுத்துரைத்து வெளியிடும் முடிவுகளைப் போகிற போக்கில் கவிஞன் எப்படி சொல்கிறான்? வெகு எளிய பதில் உள்ளது. கவிஞன் மெய்ஞ்ஞானி. விஞ்ஞானி தேடித்தேடி கண்டுபிடித்ததைக் கவிஞன் உட்கார்ந்த இடத்தில் பெற்றுக் கொள்கிறான். தாராளமாகச் சொல்லி விடுகிறான்.
விஞ்ஞானியின் பார்வையில் உலகம் ஜடப்பொருள்,புறப்பொருள். அதனாலேயே அதன் இரகசியங்கள் அவனை வழிமறிக்கின்றன. அவன் அதன் உண்மைகளை உடைத்துச் சொல்லத் தேடுகிறான். ஆனால் பிரபஞ்சத்தை வெளியே உள்ள ஜடப்பொருளாகப் பார்த்தால் , அவன் சிந்தனைப் போக்கை அது வழிமறித்து குறுக்கே நிற்கிறது. அவன் அதை ஊடுருவிப் பார்க்க x-ray, scan,telescope, microscope என்று கருவிகளை அமைத்துப் போராடுகிறான்.
விஞ்ஞானி எதை ஆராய்கிறானோ அதுவே அவனுக்குப் பெருந்தடை. அதுவே குறுக்கே நின்று அவன் வழியை மறுக்கிறது. அவன் அதை அழகுணர்ச்சியுடன், காதல் பார்வையுடன் ரசிப்பதில்லை.அதனால் பிரபஞ்ச இரகசியத்தை விளக்க விரும்பும் விஞ்ஞானிக்கு அந்தப் பிரபஞ்சமே தடையாகிப் போகிறது.
இமயமலைக்கு யாத்திரை போனார் ஓர் அறிவாளி. திரும்பி வந்ததும், `` எப்படி இருந்தது இமயம்.... என்ன அனுபவித்தீர்கள்.... என்ன கண்டீர்கள்?`` என்று நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். எரிச்சலுடன் அறிவாளி சொன்னார்... `` என்னத்தை பார்க்கிறதாம்.... அங்கதான் பெரிய மலை எல்லாத்தையும் மறைச்சுக்கிட்டு நிக்குது.... அப்புறம் என்னத்தைப் பார்க்கிறது.. எதை ரசிக்கிறது? இதுதான் பிரச்சினை. எந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைத்துக்காண விஞ்ஞானி விரும்புகிறானோ, அந்தப் பிரபஞ்சம் ஜடப்பொருளாக அவனுக்குத் தெரிந்தால், அதுவே அவனுக்குப் பெருந்தடை. அதனால்தான் விஞ்ஞானி போராடுகிறான். முடிவில் பிரபஞ்ச ரகரியங்களை ஒரு மிகப்பெரிய போர்வீரனாக அவன் கைப்பற்றுகிறான். பிரபஞ்சம் அவனுடன் ஒத்துழைக்க மறுப்பதால் அவன் வெகுவாகக் கஸ்டப்படுகிறான்.
தொடரும்.........
நன்றி- சொல்வேந்தர் சுகி.சிவம்
No comments:
Post a Comment