உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோ டிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
கலைவண்ணன் கரைமீண்டான்.
அவளை ஆதரவாய் அணைத்து
அங்கவஸதிரமாய்த் தோளில்
அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்
வேளை கன்னத்தில் சுட்டுவிரல்
கையெழுத்திட்டான்.
காதல் மண்டியிட்டான். காதில்
ஓதினான்....
கவிப்பேரரசின் பதிவு தொடரும்...
No comments:
Post a Comment