தென்சூடான் ஒரு பார்வை.....
தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்குத் தங்களைப் புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர்.
தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானைத் தனியாகப் பிரித்துத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. அது முதல் தென் சூடானியர்கள் தங்களது சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் போராடி வந்திருக்கிறார்கள். 2005 ஆண்டில்தான் முழுமையான அமைதி உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன்படி 2011 இல் நேரடி வாக்கெடுப்பு (referendum) நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது. 2011 சனவரி 15 இல் நடந்த வாக்கெடுப்பில் 99 விழுக்காடு மக்கள் தெற்கு சூடான் தனியாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
தென் சூடான் விடுதலைப் போரில் 20 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். பலர் நாட்டைவிட்டு ஒடி வேறுநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள். அளவிட முடியாதவாறு நாட்டின் உள்கட்டமைப்பு அழிவுக்கானது. சமூக, பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் கல்வி தடைபட்டது. பல தலைமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கே போகவில்லை. மருத்துவமனைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபட்டார்கள். தென் சூடான் அமெரிக்கா இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குப் பின்தள்ளப்பட்டு விட்டது எனலாம்.
கடந்த மே மாதம் வட சூடானின் படைகள் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் வளம் கொண்ட அப்யேய் (Abyei) நகரத்தைக் கைப்பற்றியது. அப்போது மூண்ட சண்டையில் 100,000 மக்கள் இடம் பெயர்ந்தார்கள். கடந்த மாதம் தென் கோர்டொபொன் (South Kordofan) என்ற பகுதியில் சண்டை நடந்தது. அதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு செழிக்கும் வாழ்வு மலரும் என மக்கள் நம்புகிறார்கள். புதிய அரசு இலேசில் தீர்வுகாண முடியாத பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முதலில் நிலம் தொடர்பான தகராறுகள், வட சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையிலான எல்லைபற்றிய பூசல்கள தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு புதிய நீதி முறைமை உருவாக்கப்பட வேண்டும். சிதைந்த உள்கட்டமைப்பு மீள்கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருப்பதை ஒழிக்க வேண்டும். இவற்றைப் பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவோடும் நல்லெண்ணத்தோடும் செய்து முடிக்கலாம் என தென் சூடானின் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
தென் சூடானின் விடுதலைப் போராட்டத்தின் போது அமெரிக்காவில் உள்ள பலர் ஆதரவு வழங்கினார்கள். பன்னாட்டு மீட்பு குழு (International Rescue Committee) மருத்துவம் மற்றும் தூயநீர் போன்ற அவசர உதவிகளை வழங்கியது.
தென் சூடானின் சுதந்திர நாளான யூலை 09 நள்ளிரவில் தேவாலயங்களில் மணி அடிக்கப்படும். பறைகள் கொட்டப்படும். பொது இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்படும். புதிய தென் சூடானிய குடியரசு செழிப்புற பிரார்த்தனைகள் செபிக்கப்படும்.
சூடானின் ஆட்சித்தலைவர் ஓமர் ஹசன் அல்-பஷீர் மற்றும் அய்யன்னா மன்றத்தின் செயலாளர் நாயகம், தென் சூடானின் ஆட்சித்தலைவர் சல்வா கிர் (Salva Kirr) ஆகியோர் உரையாற்றுவார்கள்.
முப்பது ஆபிரிக்க நாடுகளின் அரச தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள், தூதுவர்கள் இந்த வரலாற்றுப் புகழ்படைத்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்வார்கள். தென் சூடான் நாட்டுத் தொலைக்காட்சி சுதந்திர நாள் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது. குழப்பங்கள் எதுவும் நடைபெறுவதைத் தடுக்குமுகமாக தென் சூடானின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென் சூடானின் சுதந்திரத்தை தென் சூடானிய சட்டமன்ற அவைத்தலைவர் ஜேம்ஸ் வானி இகா (James Wani Igga) 21 துப்பாக்கி வேட்டுக்கள் மத்தியில் பிரகடனப்படுத்துவார். ஆட்சித்தலைவர் தென் சூடான் குடியரசின் ஆட்சித்தலைவராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார். அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம்பெறும்.
தென் சூடான் குடியரசு ஆபிரிக்காவில் 54 ஆவது நாடாகவும் அய்யன்னா அவையில் அதன் 193 ஆவது உறுப்பினராகவும் மலரப் போகிறது.
1800 லும் 1900 லும் சூடானில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அந்த எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் சீனா தங்களுக்குள் போட்டி போடுகின்றன. மேற்கு நாடுகளை நம்பாதஓமர் ஹசன் அல்-பஷீர் தனது நாட்டின் எண்ணெய் வளத்தையும் அது தொடர்பான உரிமைகளையும் சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள்ள பெரும் உற்சாகத்தோடு அந்த எண்ணெய் வளத்தை சீனா சுரண்டிக் கொண்டிருக்கிறது.
மேலே குறிப்பிட்டது போல் தென் சூடான் கிறிஸ்தவ கருப்பு இன ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். அவர்கள் நீண்ட காலமாக வட சூடானில் பெரும்பான்மையாக வாழும் அராபியர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்தனர். வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் 2003 இல் தொடங்கியது. ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்குத் தெரிய வந்தது. டாவூர் மாநிலத்தில் இதுகாலவரை சுமார் 2 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது இரண்டு போராளிக் குழுக்கள் டாவூர் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி சூடானுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தார்கள். சூடான் பதில் தாக்குதல் தொடுத்தது. சூடானிய வான்படை வான் தாக்குதலை நடத்தியது. சூடான் இராணுவம் அராபு ஜன்ஜாவீட் (Janjaweed) ஆயுதக் குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கியது. இரு குழுக்களுக்கும் இடையிலான சண்டை இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
டாவூர் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் சூடான் ஆட்சித்தலைவர் உமர் அல் பசீருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. அராபிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அவர் கைது செய்யப்படுவதற்கோ பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிப்பதற்கோ விரும்பவில்லை. அதனால் அவர் சுதந்திரமாக நடமாடுகிறார். அண்மையில் அவர் சீனாவுக்கு உத்தியோகச் செலவு ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளார். சீனா சூடானின் மொத்த மசகு எண்ணெய் உற்பத்தியில் பாதியை இறக்குமதி செய்கிறது. அதனால் சூடான் அரசை எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறது. சீனா சூடானில் மசகு எண்ணெய், பதனிடும் நிலையங்கள், விவசாய மேம்பாடு ஆகிய துறைகளில் அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.
பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றம் பிடியாணை பிறப்பிக்கப் போவதாகத் தெரியவந்ததும் சூடானின் டாவூர் மானிலத்தில் இயங்கி வந்த மேற்குலக உதவி நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகளை நிறுத்தும்படி சூடான் உத்தரவிட்டது. சூடான் அரசினால் கைவிடப்பட்ட டாவூர் மக்களுக்கு உணவு தண்ணீர் மருந்து வசதிகளை வழங்கிவந்த இந்தத் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன.
தென்சூடானின் மலர்வு............
உலகின் 193வது தேசமாக பிறப்பெடுக்கின்றது தெற்கு சூடான்.ஆபிரிக்க கண்டத்தில் அளவில் பெரியதும் – கனிம வளம் கொண்டதுமான நாடு சூடான். பல்லாண்டுகளாக வடக்கு – தெற்காக பிளவுண்டு உள்நாட்டு போராக வெடித்து, விடுதலைப் போராக முடிவுக்கு வந்தபோது 1.5 மில்லியன் மக்கள் தம் உயிர்களை இழந்திருந்தனர்.2005ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாடு குருதி தோய்ந்த இந்த உள்நாட்டுபோரை முடிவுக்கு கொணர்ந்தது. அத்துடன் சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள் தோன்றியபோதும் அமைதி உடன்பாடு முறிபடாமல் பேணபட்டதால் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மக்கள் ஆணையும் பெறப்பட்டது.
அதன்படி யூலை 9ம் நாள் ‘தென் சூடான்’ என்னும் புதிய தேசம் பிறப்பெடுத்தது.
அதனை வட சூடானும் ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன் தலைநகரம் Juba.
தென் சூடானின் அதிகாரபூர்வமான தேசிய கீதம்(வீடியோ இணைப்பு)
சில புகைப்படங்கள் உங்களுக்காக.........
நன்றி - இணயம்.
No comments:
Post a Comment