***
இருண்ட இரவுகளில் உன்
விழியின் ஒளியையே
விளக்காகக் கொண்டு
நான் எழுதும்
இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப் பார்ப்பவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.
***
பேசக் கூடாதா?
என்னதான்
மெளனம்
மொழிகளிலேயே சிறந்த
மொழியென்றாலும்
இன்னொரு மொழியைத்
தெரிந்து வைத்துக் கொள்வதில்
என்ன குற்றம்?
பேசு!
***
ஒரு மூங்கிற் காட்டையே
அழித்து
புல்லாங்குழல் செய்தேன்
ஊதும்போதுதான்
அது
ஊமையென்று தெரிந்தது
உன்னைப் போல்!
***
என் வீதியில்
எல்லா வாகனங்களும்
வருகின்றன-ஆனால்
எனக்கு மட்டும்
இடம் இல்லை
என்கிறார்கள்
***
எத்தனை தேசங்கள்
சுற்றி வந்தாலும்
என் கால்கள்
உன் தெருவிற்கே
வந்து சேர்கின்றன
அவை அறிந்தது
உன் தெரு மட்டும் தான்
***
நிலவைப் பார்வையிடும்
நட்சத்திரங்களைப் போல
அணைந்தணைந்து எரியும் என்
ஆசைகள் உன்னைப்
பார்வையிடுகின்றன.
***
எத்தனை விருது கிடைத்தாலும்
இதயம்
நிறைவுபெற மறுக்கிறது
ஒரே ஒரு முறை உன்
கண்களால் என்னை
கெளரவிக்க மாட்டாயா?
***
என் செய்தியை
நான் எழுதத் துடிப்பது
உன் இதயத்தில்தான்
அறிந்தும் அறியாதவள்போல்
நீ ஏன்
ஆட்டோகிராஃபை
நீட்டுகிறாய்?
***
வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிக்கிறது
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது
உனக்கெங்கே
புரியப்போகிறது?
***
இந்த ஆரவாரம்
எங்கிருந்து கேட்கிறது..
எங்கிருந்து??
என் நினைவுகளை
கொள்ளை கொண்ட
நீ
எங்கிருக்கிறாய்?
எங்கிருக்கிறாய்?
***
வீதியில் கொட்டும்
போர் முரசுதான்
வீட்டுக்கு வந்ததும்
வீணையாகி விடுகிறது!
அதுவும்
சோக கீதத்தை மட்டுமே
மீட்டுகின்றது
***
எந்தச் சோக வீணையையும்
தூக்கிச்
சுமக்க வேண்டியிருக்காது
நீ மட்டும் என்
தோளில் இருந்தால்!
***
என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களைப் பயிரிட்டேன்
அறுவடை செய்ய
உன்னை அழைத்தேன்
அரிவாளோ
நீ வந்த பிறகுதான்
என் தவறு
எனக்குப் புரிந்தது!
***
சில பேர் காவியங்களைப் படைக்கிறார்கள்
சிலர் காவியங்களில் வாழ்கிறார்கள்
என்றேன்.
காவியமாகவே வாழ்ந்து விடுகின்றேன்
என்றாய்!
எழுதி வைக்கப்படாத
எந்தக் காவியமும்
நிலைக்காது என்பதை
நினைத்துப் பார்த்தாயா?
***
கனவுகளை நான் வெறுக்கிறேன்
அவை எத்தனை
அழகாய் இருந்தாலும்,
நிழல்களின் ஒப்பந்தங்களைவிட
நிஜங்களின் போராட்டமே
எனக்குப் பிடிக்கும்.
உன் பிடிவாதம்
எனக்குப் பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது!
நீ
நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான்
நானாக இல்லை.
***
தொட முடியாத
தொலைவில்
இருப்பதாகக்
கனவு காணாதே!
இந்த பூமியின்
விளிம்பையே
தீண்டிவிடும்
அளவிற்கு
என் விரல்கள்
நீளமானவை.
ஏனென்றால்
என் கைகள்
வெறும் கைகளல்ல...
கவிதைகள்!
***
- மு.மேத்தாவுடன் என் கற்பனையும்
குறிப்பு: இந்தத் தளத்தை உங்களுடைய ஃபேஸ்புக்குடன் இணைத்துக் கொள்ள
FB ஐ நோக்கி எனது தளம்.......
இதிலுள்ள like button ஐ அழுத்தவும். நான் இடும் இடுக்கைகளை உடனுக்குடன் உங்கள் fb இல் காணமுடியும்.
- நன்றி.
No comments:
Post a Comment