Saturday, July 24, 2021

இதில் யார் பணக்காரன்

 ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

- படித்ததில் பிடித்தது -

Tuesday, July 20, 2021

கற்றது கையளவு கல்லாதது உலகளவு


 சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத் தான் இருந்தது.*

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 1௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான். சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக் கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச் சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார். விலை என்னவென்று விசாரித்த போது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 5௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான். விலையைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன் தான் வைத்திருக்கிறான். அவன் விலை 1௦௦ ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 5௦௦ ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார். அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத் தான் இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால் தான் கூடுதல் விலை,” என்றான். “அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர். “சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால் தான் இவ்வளவு விலை,” என்றான் பையன். “உண்மையாகவா ?” என்று வியந்தார் வாடிக்கையாளர். “வாங்கிப் பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,” “சரி,சரி, ஒரு கிலோ கொடு. ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார். அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டு வந்தார். புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ? ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்து விட்டது அவருக்கு. ‘இன்று அவனைப் போய் ‘உண்டு அல்லது இல்லை’ என்று ஆக்கி விட வேண்டியது தான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்.. அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் அவனும், “ ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ”, என்று உற்சாகமாகக் கூறினான். வந்ததே கோபம் அவருக்கு ! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக் கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து விட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டு விடுவேன்”, என்று கத்தினார். பையனோ அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்: “ சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்ன போது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்து விட்டீர்கள். அப்படி என்றால் தற்போது நீங்கள் புத்திசாலி தானே சார்.. என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.” வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார். கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

படித்ததில் பிடித்தது