Thursday, July 21, 2011

உனக்கான உதிரிப் பூ

***
எந்தப் பொற்பாதங்கள்
என் இதயப் பாதையில்
நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை
உண்டாக்கினவோ...
எந்தப் பூவிழிகள்
என் நெஞ்சில்
புதிய புதிய
கனவுகளைப் படைத்தனவோ...
அவற்றிற்கு.....
***
 உன் கண்ணீரை மொழிபெயர்த்தேன்
அது கவிதையாயிற்று
உன் புன்னகையை மொழிபெயர்த்தேன்
அது சங்கீதமாயிற்று
முழுமையாக
உன்னையே மொழிபெயர்த்தேன்
அந்த உயிருள்ள மொழிபெயர்ப்பு
என்னையே மொழிபெயர்த்து
எழுதலாயிற்று!
***
கண்ணகி
காற்சிலம்பைக் கழற்றியதாள்
நான்
சிலப்பதிகாரம் படித்தேன்
நீ உன்
கைவளையல்களைக் கழற்றியதால்
என் தோழர்கள் இக்
கவிதையை வாசிக்கப்போகிறார்கள்!
***
உன் தோட்டத்தில்
எத்தனை அழகான பூக்களை
நீ வளர்த்திருக்கிறாய்!
ஆனால்
எல்லாப் பூக்களையும்விட
மிக அழகாக வளர்ந்த பூ
நீதான் பெண்ணே!
***


பாடசாலையை நோக்கிப்
பாதங்கள் நடந்த போது
உன்னுடைய பட்டுக் கரங்களால்
எத்தனை எத்தனை புத்தகங்களைத்
 தொட்டுத் தூக்கிச் சென்றாய்!
ஆனால்
எல்லாப் புத்தகங்களையும் விட
ஒரு புதுமையான புத்தகம்
நீதான் பெண்ணே!
***
சங்கீத அலை பரவும்
செளந்தர்யத் தேன் குரலில்
எத்தனை எத்தனை
இனிய பாடல்களை நீ
இசைத்தாய்!
ஆனால்
எல்லாப் பாடல்களையும் விட
இதயத்தை வருடியபடி
இனித்திருக்கும் பாடல்
நீதான் பெண்ணே!
***
ஆயிரம் கனவுகளை
உன்னை
யார் வளர்க்கச் சொன்னார்கள்?
நீ ஏன்
என்
நிழலோடு
சண்டை பிடிக்கிறாய்?
***
காவியங்கள் மட்டுமே
சந்திக்கக்கூடிய
சில நல்ல மனிதர்களை
வாழ்க்கையிலும்
சந்திக்க நேரும்போது
வாழ்த்தக்கூட முடிவதில்லை
வணங்கத்தான் தோன்றுகிறது
-என்றாய்

எனக்குத் தெரியும்
நீ வேண்டுவது
தொழுவதை அல்ல
தொடுவதை!
***
கல்யாணி ராகத்தைக்
காணாமல்
முகாரியிலேயே உன் பாடல்
முடிந்து விடுமோ?
எதற்கும்
பாகவதரைக் கேட்டுப் பார்!
***
நான் சூறாவளியாய்ப்
புறப்பட்டபோது
தனித்து விடப்பட்டதொரு
அனாதைச் செடியின்
ஒற்றை ரோஜாவாய் நின்று
என் இரக்கத்தைப்
பெற்றுக் கொண்டாய்.

பார்வைப் பூக்களால் என்
பாதங்களை அர்ச்சித்தாய்!

மெல்லிய பூங்காற்றாய்
உன் மேனியை வருட வந்தபோது
ஆயிரந் தலைவாங்கி
அபூர்வ சிந்தாமணியாய் மாறி
அவஸ்தைப் படுத்தினாய்

மழை நிழல் பிரதேசமாக
என்னை
மாற்றினாய்!
***
உன்னைக் கண்ட பிறகுதான்
நான்
கனவு காணக் கற்றுக் கொண்டேன்
இப்போது-
கனவுகளே உன்னை எனக்குக்
கற்றுத் தருகின்றன.

நீ புறப்பட்டபோது
என்னை மட்டுமே
அலட்சியப்படுத்துவதாக நினைத்தேன்
இந்த பூமியையே
அலட்சியாப்படுத்திவிட்டுப்
போய் விட்டாயே.

என் இரவே
கண்களாய் மாறிக்
கண்ணீர் சிந்தும்போது
பகலுக்கு நான்
என்ன
பதில் சொல்வது?
***
ஒரே ஒரு பூவுக்காக
நீ யாசித்தபோது
என் கூடை
காலியாயிருந்தது.

இப்போது
என் கூடையெல்லாம்
பூவாய்க்
குவிந்திருக்கும்போது
உன்
கல்லறையைப் பார்த்து
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன!
***
                                                                - மேத்தாவுடன் எனது கற்பனையும்

Wednesday, July 20, 2011

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்

பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன.
இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரி வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச்சமூக வலையமைப்பின் பெயர் "டுலாலிப்" ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் "With Tulaip you can find what you need and share what you know easier than ever" எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.
இதேவேளை இப்பக்கம் அத்தளத்திலிருந்து பின்னர் அகற்றப்பட்டுள்ளதுடன் வேறொரு பக்கம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக இணையத்தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது இதன் பெயர் "Tulalip" என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                                                                                                                   -  நன்றி இணையம்.

Tuesday, July 19, 2011

காமம் என்பது......................???


காமம் என்பது உன்னுடைய படைப்பு அல்ல. அது
கடவுளால் உனக்கு அளிக்கப்பட்ட வெகுமதி.

காமம் என்பது ஆரம்பம், ஆனால் முடிவல்ல.

நீங்கள் ஆரம்பத்தை தவறவிட்டால், முடிவையும்
தவற விட்டு விடுவீர்கள்.

தந்திரா என்பது காமத்தை அடைவது அல்ல. காமம் என்பது
பேரின்பத்தின் மூலஸ்தானம் என்று சொல்லுகிறது.

தந்திரா சொல்லுகிறது; நீங்கள் தியானத்திற்குள்
செல்வீர்களேயானால் காமம் முற்றிலுமாக மறைந்து விடுகிறது.

இந்த எளிமையான காமத்தில் தவறு ஏதும் கிடையாது.

ஒருவர் காமத்தை ஏதேனும் ஓர் நாள் கடந்தே
ஆகவேண்டும், ஆனால் காமத்தின் மூலமாகத்தான் கடந்து
சொல்வதற்கான வழி உள்ளது. நீங்கள் அதனுள் சரியானபடி
செல்லாமல், கடந்து செல்வது மிகவும் கடினமானது.

ஆகவே காமத்தின் மூலமாகச் செல்வது அதைக் கடந்து
செல்வதற்கான வழியில் ஒரு பகுதியேயாகும்.

உங்கள் விழிப்புணர்வற்ற நிலையில்,
இயந்திரத்தன்மையுடன் கூடிய காமம் தவறானது.

காமம் என்பது தவறே இல்லை. அதை இயந்திரத்
தன்மையுடையதாகச் செய்யும்போதுதான் அது தவறாகி
விடுகிறது.

காமம் என்பது இயற்கையான நிகழக்கூடியதே.

காமத்தின் துணையுடன் கிடைக்கும் இன்பமே, தியானத்தில்
அளவுக்கு அதிகமாக காமத்தின் துணையின்றிக் கிடைக்கிறது.

நீங்கள் முக்தி நிலை அடைவதற்கு காமஉணர்வுதான்
போக்ஷாக்கு அளிக்கிறது.





 “....... சிற்றின்பத்தில் இருந்து
     மனிதனை பிரிக்கமுடியாது
     என்பது மற்றொரு முக்கியமான
     கருத்து. காமம்தான்
    ஆரம்ப இடம்: மனிதன்
    அதில்தான் பிறந்துள்ளான்.
    கடவுள் காமத்தைத்தான்
    படைப்பின் ஆரம்ப
    நிலையாக ஏற்படுத்தியுள்ளார்.
    கடவுளேகூட பாவச்
   செயல் என்ற கருதாத ஒன்றை
   மிகப்பெரும் மனிதர்கள்
   பாவச்செயல் என்றழைக்கின்றனர்.
   கடவுள் காமத்தை
   ஒரு பாவச் செயலாக
   கருதியிருப்பாரேயாகில் இந்த
   உலகில் கடவுளைத் தவிர
   மிகப்பெரிய பாவி வேறு
  யாரும் இருக்க முடியாது;
  இந்த பிரபஞ்சத்திலேயே
  அவரைவிட மிகப்பெரிய பாவி
  இருக்க முடியாது......”

                                                                                                     - ஓக்ஷோ.

Sunday, July 17, 2011

காதல் என்ற ஓர் போதை...


காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.

காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில் தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்

இந்நிகழ்வின்போது 'திடீரென சிறப்பாக உணரச்செய்யும்' டோபைன், ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள் }ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்

பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்