Showing posts with label கவிதைக் கலசம். Show all posts
Showing posts with label கவிதைக் கலசம். Show all posts

Thursday, July 9, 2020

மு. மேத்தாவின் கவிதைகளில் இருந்து.....

💗💗💗காதலர் பாதை💗💗💗

💖
கல்யாண மேடையை 
அலங்கரிப்பதற்காகக் 
கனவு கண்ட 
கன்னிப் பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
சரிந்து விழுந்தன !
💖

💞💞💞என் முதற் காதல்💞💞💞

😍
முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம்
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!
😍

😌😌😌அரலிப்பூ அழுகிறது😟😟😟

💀
பூக்களே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை யாகலையே!
💀



Tuesday, March 27, 2012

மோகத்தை வாழவிடு !!!

வைரமுத்துவின்,,,,,,,
 மோகத்தை வாழவிடு !!!

பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவின் உன் பேரழகை
திருடாமல் போவேனோ???

வானே இடிந்தாலும் 
வையம் நகர்ந்தாலும் 
தேனே உன் பொன்னுடலம்
தீண்டாமல் போவேனோ???

ஏதேனும் மின்னல் வந்து 
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ???

வெளியே தீவிழுந்து 
வீதி எரிந்தலும் 
கிளியே உன் நுனிமூக்கைக்
கிள்ளாமல் போவேனோ???

ஒருநாள் ஒரு பொழுது
உன்மடியில் நானிருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ???

நீலக் குழல் விலக்கி
நெற்றியிலே முத்தமிட்டுக்
காலகதி மறக்காமல்
கண் மூடிப் போவேனோ???

நீராக மாறிஉந்தன்
நெற்றியிலே நானிறங்கிக்
கூரான மார்பில்
குதித்துவிட மாட்டேனோ???

மோகச் சிகரத்தில்
மோட்சநிலை காணாமல்
சாகப் பிறந்தவன் போல்
சட்டென்று போவேனோ???

தங்க விரல்தடவி
தளிர்தடவி மலர்தடவி
அங்கத்தில் அத்வைதம்
அடையாமல் போவேனோ???

பேச்சிழந்த வேளையிலே
பெண்ணழகு என் மார்பில்
மூச்சுவிடும் வாசனையை
முகராமற் போவேனோ???

என்நினைவு மெல்லமெல்ல
என்னைவிட்டுப் போகையிலும்
உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனோ???

கண்ணுக்குள் கண்வைத்துக்
கண்ணிமையால் கண்தடவிச்
சின்னதொரு சிருங்காரம்
செய்யாமற் போவேனோ???

மின்மினிப் பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்துக்
கைதட்ட மாட்டேனோ???

வட்ட நிலாச் சாறு
வடிகின்ற ராத்திரியில்
கட்டழகே உன் நிழலைக்
கண்டுவிட மாட்டேனோ???

உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
திலகத்து நெற்றியிலே
தீட்டிவிட மாட்டேனோ???

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ???

தலையெல்லாம் பூப்பூத்து
தள்ளாடும் மரம்ஏறி
இலையெல்லாம் உன்பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ???

சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ???


Friday, December 9, 2011

காலம் தோறும் காதல்!!!

ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் காலத்திற்குக் காலம் வடிவங்களை மாற்றிக் கொண்டு செல்கின்றது.

1.சங்க காலம்

ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் 
பசலை உண்ணும் பாராய் தோழி

2.காவிய காலம்

பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார்- இன்னும்
சுரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி

3.சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரகத்தால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன்
பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

4.சிற்றிலக்கிய காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள்- மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள்- நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள்- வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்ப்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள்-வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

5.தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள்-என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் யோதிஒன்று காட்டினாள்-என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில்-பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே-அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

6.திராவிட காலம்-1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

7.திராவிட காலம்-2

விண்-அப்பம் போன்ற நிலவுவந்து-காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல- நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விளையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

8.புதுக்கவிதைக் காலம்-1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருந்தேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த 
உன் கருங்கூந்தற் சிறுபூவை

9.புதுக்கவிதைக் காலம்-2

உன்வீட்டு ஆன்டனாவிலும் 
என்வீட்டு நைலோன் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று 
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.

kaviperarasu vairamuththu.

Sunday, September 25, 2011

முதன் முதலாய்... உனக்காக...



முதன் முதலாய் அம்மாவுக்கு(வைரமுத்து)


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??


பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

Wednesday, September 14, 2011

காமம்!!! காமம்!!! காமம்!!!



அரவணைத்துக் கொள்! அன்பே
அரவணைத்துக் கொள்!
புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்
ஆசைப்படு!
அதிகாரத்தோடு கேட்டுக்கொள்
மோகப் படு!
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்
உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் மார்பு கொண்டு பழுது பார்
விதைத்துக் கொள்!
விளைய விடு!
மேய்ந்து கொள்!
மீதம் வைக்கதே!
அங்கம் அனைத்தும் அடக்கி விடு!
ஆண்மை கொள்! பெண்ணே
ஆண்மை கொள்
என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய!
மோகப் புரட்சி செய்!
நீயே தொடங்கு!
நீயே முடி!
சேர்த்துக் கொள்! செப்பனிடு!
படர்ந்து கொள்! பறக்க விடு!
என் விரல் கொண்டு
உன் உடல் உழுது கொள்!
என் உதட்டு வரிகளில்
உன் உதடுகளால் எழுதிக் கொள்!
உன் விரல்களில்
என் தலை முடிகளை தரம் பார்!
உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்!
அடைத்துக் கொள்!
என்னில் உன்னை…
உன்னில் என்னை…
என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்பு!
உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போடு!
உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்து!
உன் உரசல்களில்
என் ஆண்மையை தீயுட்டு!
ஆக்கிரமித்துக் கொள்! அழகே
ஆக்கிரமித்துக் கொள்!
உன் சிருங்காரத்தில்
என்னை சிறைப்படுத்து!
உன் பாதம் தொட
என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!
உன் இடை சுற்ற
என் கரம் வேண்டு!
உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்கு!
எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
என்னிலிருந்து,
உன்னைத்தவிர…!

எங்கேயோ படித்தது...

Thursday, September 8, 2011

தண்ணீர் தேசம்...........2

தமிழ்ரோஜா

அதைவிட சுகமாக
அம்சத்வனிராகம்கூட அவள்
பெயரை உச்சரித்திருக்க
முடியாது.

காதல் அழைக்கும் போதுதான்
பெயர்வைத்ததன்
பெருமைபுரிகிறது.

அந்த சுகம் மீண்டும் அவளுக்கு
வேண்டியிருந்தது. அதனால்
உம் கொட்டாமலிருந்தாள்.

தமிழ்ரோஜா

- இப்போது அவன் அழைத்தது
தோடிராகம்.

உம் என்றாள் தமிழ்.

தண்ணீருக்கு நீ பயந்தால்
உன்னைக்கண்டு நீயே
பயப்படுகிறாய் என்று
அர்த்தம்.

புரியவில்லை.

உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான்.

உடம்பில் ஏன் உப்புநீர்
ஓடுகிறது?

கடற்கொடை. தாய்தந்த
சீதனம். முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த
உறவுத் திரவம்.

முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?

கலையின் கழுத்தைக்
கட்டிக்கொண்டாள் தமிழ்.
ஒருவருக்கான காற்றை
இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்
உண்மை உளறினான்.

கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

ஆகா, என்று ஆச்சரியம்
காட்டிய தமிழ் அவன் முகத்தில்
முள்குத்தாத பிரதேசம்தேடி
முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்
பரவக்கண்டவன், அவள்
கழுத்தடியில் கைபதித்துக்
குளிரக்குளிரக் குறுமுடி
கோதினான். குழந்தையே.
என் குழந்தையேஎன்று
கொஞ்சினான்.

புரிகிறதா? கடல் நம்
தாய். தாய்கண்டு தமிழ்
அஞ்சலாமா?

தாயென்றால் பூமியை அவள்
ஏன் புசிக்க வேண்டும்?

அவள் மீது குற்றமில்லை.
கடலின் கீழேநகரும் பாறைகள்
அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை.
கடல் தந்த அனுமதியால்தான்
முழ்காத நிலப்பகுதி முச்சுவிட
முடிகிறது.

கடல்நீர் இடம்மாறி
நிலப்பரப்பில் நின்றால் எல்லா
இடங்களிலும் முன்று
கிலோமீட்டர் உயரம். தண்ணீர்
நிற்கும்.

புள்ளிவிரம் சொல்லியே
பொழுது
போக்கிவிட்டீர்கள்.

சரி, நல்லவிவரம்
சொல்லட்டுமா? ஒரு
முத்தத்தில் எத்தனை வோல்ட்
மின்சாரம்தெரியுமா?

போதும். போதும்.
புள்ளிவிவரப் புலியே.
ஆளைவிடுங்கள்.

விடமாட்டேன். வா.

தண்ணீரில் நனை அல்லது
தண்ணீரை நனை. அலையோடு
விளையாடு.

தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்
சொல்லாத இடங்களில்
விழுகையில் இல்லாத அனுபவம்
எழுமே....
அந்த சுகம் துய்.

எத்தனை மனிதர்
கடல்பார்த்தனர்? எத்தனை
மனிதர் இதில் கால்வைத்தனர்?

வா. இந்தச் சிற்றலையில்
கால் வைத்து யாரும் செத்துப்
போனதில்லை.

தண்ணீர் பயம் தவிர்.
சொட்டச் சொட்ட நனை.
கிட்டத்தட்டக் குளி.
நீரின் பெருமை நிறையப்பேர்
அறியவில்லை. காதலி பெருமை
பிரிவில். மனைவி பெருமை
மறைவில். தண்ணீரின் பெருமை
பஞ்சத்தில். அல்லது
வெள்ளத்தில்.

நீ உணவில்லாமல் ஒருமாதம்
வாழலாம். நீரில்லாமல்
ஒருவாரம் வாழமுடியாது.
தண்ணீர்தான் உயிர். இந்தக்
கடல் அந்த உயிரின் தாய்.
தாயோடு தள்ளி நிற்பதா?
வா.

எட்டி நின்றவளைக் கட்டிப்
பிடித்தான். திமிறினாள்.
வாழைத்தண்டாய்
ஓடிந்தாள். வாளை மீனாய்
வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான். அவள்
பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த
விளையாட்டுமட்டும்
வேண்டாம்.

என்னோடு வாழ்ந்தால் நீ
நெருப்புப் பள்ளங்கள் தாண்ட
வேண்டியிருக்கும். நீர்கண்டு
பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.
தண்ணீர்தான் பயம்.
அவன் தூக்கமுயன்றான். அவள்
துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.
நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்
சேர்த்தெடுத்தான். அவளைச்
சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்
நீச்சலடித்தாள். இடுப்பளவுத்
தண்ணீரில் இறக்கிவிட்டான்.
அஞ்சினாள். தண்ணீரின்
ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்
பற்றினாள். அவன் உதறி
ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த
அலைகள்கண்டு அலறினாள்.
பிரமைபிடித்துப்
பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து ஒரு பேரலை
அவள் பெயர் சொல்லிக்
கொண்டே படைதிரட்டி
வருவதாய்ப் பட்டது அவளுக்கு.
அவ்வளவுதான்.
அவள் ஞாபகச்சங்கிலி
அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்
மோதுதலில் தன்னிலை குலைந்து
தடுமாறி எழுந்து ஒருகணம்
மிதந்து மறுகணம் அமிழ்ந்து
மீண்டும் எழுந்து மீண்டும்
விழுந்தாள். அலைகளில்
தொலைந்தாள்.


கவிப்பேரரசின் பதிவு தொடரும்...

Monday, August 15, 2011

நிழலாக நீயா...???

அனைவரும் கூறும்
கூற்று ஒன்று
என்றும் நீ கலங்காதே!!!
உன்
நிழலாக நான் என்றும் வருவேன்...

ஆனால்
நீ
நிழலானது தான் இங்கு
பிரச்சினையே!!!

வெளிச்சத்தில் மட்டுமே
என்னுடன் வரும் உன்னை
எவ்வாறு நான்
ஏற்றுக்கொள்வது...?



சந்தோசத்தில் மட்டும் தான்
என்னுடனா???
இருட்டில் என் நிலை
என்னவாவது???

ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.

நேரத்திற்கு நேரம்
உருமாறும் உன்னுடன்
எவ்வாறு நான்
நின்மதியாய் இருப்பது???


ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.


சில நேரங்களில்
நீ
என் காலுக்கடியில் போகநேரிடுமே!!!
உன்னால் அது முடியாதே...


ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.


நிலையில்லா உருவமற்ற
நிழலே!!!!
நீ,
என்றுமே எனக்குத் தேவையில்லை.

                                                                                              இ.சுகானன்.

Thursday, August 4, 2011

காதலித்துப்பார்......

உன்னைப்பற்றி சிந்திப்பதைவிடுத்து
பிறரைப்பற்றியே சிந்திக்கத் தொடங்குவாய்..
உன்னுடன் நெருங்கியவர்களுடன் கூட
சந்தேகத்துடனேயே பழகுவாய்...
உன் சிந்தனையும் செயல்களும்
வேறுபட்டே இருந்தாலும்..
இறுதியில் அணைத்தும்
ஒன்றிலேயே முடிவடையும்..
உன்னைச் சுற்றி ஒரு கூட்டமே திரியும்
நீ பலரால் கல் எறியப்படுவாய்...
எறிந்த கற்களைக் கொண்டு
புதிய வீடுகட்ட முயற்சியும் எடுப்பாய்..
தொலைபேசி அழைப்பு கேட்டவுடன்
உன் காதும் சூடாக ஆரம்பிக்கும்..
“ஹலோ” என்று தொடங்கிய உனக்கு
“ம்ம்ம்” என்ற வார்த்தையே
இறுதியில் மிஞ்சும்..
அழைப்புக்கள் அனைத்தும்
ஒரே பெயரில் இருந்தே
வரவேண்டும் என்று ஆசைப்படுவாய்..
உன் பெயர் “செல் போனில்”
புதுப்பொழிவுடன் உருமாற்றம் பெறும்..
பெண் “ நண்பன்” ஆக்கப்படுவாள்..
ஆண் “ நண்பி” ஆக்கப்படுவான்...
நித்திரைக்குப் பின்னும் போர்வைக்குள்
முணு முணுப்புச் சத்தம் கேட்கும்..

காதலித்துப்பார்........
இருண்ட இரவுகளுக்குள் கூட
உன் காதருகே மாத்திரம்
ஓர் ஒளி வீசும்.

அதற்கு,
காதலித்துப்பார்.

                                                                                                                     தொகுப்பு :-இ.சுகானன்.



Friday, July 29, 2011

காதலும் கண்ணீரும்....


காதலும் கண்ணீரும் பிரிக்க முடியாதவை! காதல் ஜெயிக்கும் போது ஆனந்தக் கண்ணீர்! அதே காதல் தோல்வியில் முடியும் போது பெருக்கெடுப்பது ஆற்றாமைக் கண்ணீர்.

இடையிடையே ஊடல், கூடல், இடைக்காலப் பிரிவு என ஜெயித்த காதல்களிலும் கண்ணீருக்கு இடமுண்டு. சில காதலர்கள் தமக்குள் தம்மை ஏமாற்றி அழ வைத்துக் கொள்வதுவும் உண்டு.

ஆனாலும் நிரந்தரப் பிரிவில் ஊற்றெடுக்கும் கண்ணீரின் கனம் தான் அதிகம். எங்கிருந்து தான் அருவி போன்று நீளமான கண்ணீர் வருகிறதோ தெரியாது? 

சூரியன் போலே அவளும் சுட்டுவிட்டுத் தொலை தூரம் மறைந்துவிட்டாள்  ஆண்கள் இதயம்  என்றால் கற்களா? எறிந்து எறிந்து போய்விட்டாள்..ஆனால் இவளுக்கு...

கண்ணீருக்குள் நினைவுகள் தத்தளித்தன!  நெஞ்சுக்குள் நினைவுகள் சுட்டெரித்தன! தொண்டைக்குள் நினைவுகள் முள்ளால் உறுத்தின! கண்ணுக்குள் நினைவுகள் நீரால் மொழிபெயர்த்தன. 

“ கண்ணீரை மட்டும் காதல் பரிசெனத் தந்து போனவளே! ஏன் என்னைக் காதலித்தாய்?” மூச்சு நிற்கும்வரை கூடவே வருவேன் என்றாயே பேச்சை மாற்றிவிட்டு போய்விட்டாயே!

பொருளாய் கொடுத்த பரிசுகளைத் திருப்பித் தந்து விட்டாய்! உணர்வுகளாய் தந்தவற்றை எப்படித் தருவாய்? அல்லாது தரத்தான் முடியுமா உன்னால்??

உதடுகளால் ஒற்றிக்கொடுத்த கைக்குட்டையை பத்திரமாய்த் தந்துவிட்டாய்! என் இதழ்கள் உறவாடிய உன் உதடுகளை உன்னால் தர முடியுமா?! உனக்குள் நானும் , எனக்குள் நீயும் சுவாசித்தோமே! அந்த மூச்சுக் காற்றின் ஸ்பரிசத்தை உன்னாள் திரும்ப தர முடியமா?

எல்லாவற்றையும் விட்டுவிடலாம். உனக்கே தாரைவார்த்துக் கொடுத்த என் பொக்கிசமாய்ப் பேணிய அந்த அன்பை எந்த ஜென்மத்தில் திருப்பித் தருவாய்?

“ என் அன்பே!” நீ என் சொத்து என்றேன். “ நடிக்காதே” என்று நீ வெடித்தாய்! உன்னைப் பிடிக்காமலே என் அன்பைப் பறிகொடுத்த என்னை, நீ கடினமாக்கியது நிஜம்தான்! 

கண்ணீரில் நான் நனைந்து கொண்டிருக்க, பன்னீரில் நீ குளித்து மணக்கோலத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பாய்!

உன் காதல் கைக்குட்டை! வேலை முடிய வீசிவிட்டுப் போவாய்! ஆனால் பாவி எனக்கோ காதல் இதயம்! இறக்கிவைத்தால் இறந்து போவேன்.

துக்கம் பீறிட்டது. தீயை மூட்டிவிட்டு அணைக்காமல் சென்று விட்டாள். தோலை உரித்துவிட்டு பழத்தை புசிக்ககாமல் மறைந்துவிட்டாள்.  காதலெனும் வெள்ளத்தில் என்னை இறக்கிவிட்டு கரை சேர்க்காமல் கைவிட்டுச் சென்றுவிட்டாள்.

தட்டித் தடுமாறி கரை சேர்ந்தாலும் அவள் மேல் கோபம் வரவில்லை. அது அவள் குறும்புத் தனமாக இருக்கக் கூடாதா என ஏக்கம் தான் வருகிறது. கள்ளங்கபட மற்ற சிரிப்பு மொத்தமும் ஒரே நாளில் என்னை அழவைக்கத்தானா?

காதல் நினைவுகள் துரத்துகின்றன.. காமம் அவனை வருத்துகின்றது! நள்ளிரவு அவனைக் கொல்கிறது. உயிரையும் உடலையும் பிழிகிறது! காதலில் பிரிவு இதமானது... அதுவும் எல்லை மீறினால்... என்ன கொடுமை.


அவன் கண்ணீர் தடைப்படாத மடை திறந்த வெள்ளாமாக கட்டுக்கடங்காமல் பாய்கின்றது. கரைதான் எங்கோ.....?

அவன் உடலும் உயிரும் உருகித் தேடிக்கொண்டே இருந்தன. அவன் கண்ணீர் இரவை ஈரமாக்கியது. அவன் சோகம் இரவை நெகிழ வைத்தது.

காதலையும் காமத்தையும் பாதி நீந்திவிட்டு மீதியைக் கடக்க முடியாமல் கண் விழித்திருந்தான்.

காமக் கடும்புனல் நீந்திக் கரை கானேன்
  யாமாத்தும் யானே உளேன்”
அதிகாரம்:117    குறள்: 1167

Monday, July 25, 2011

காதலும் வாழ்க்கையும்


வாழ்க்கை எனும் நாடகத்தை பூமி எனும் அரங்கிலே
மேடை ஏற்றினான் இறைவன் எனும் இயக்குனன்
நட்பென்ன காதலென்ன இரெண்டும்
புரியாது எதிரொலிக்கும் அதிசய களமிது

இன்பம் துன்பம் வெற்றி தோல்வி என்பதும்
எந்த மனித வாழ்விலும்  நிரந்திரமில்லையே
அலைகள் எனும் தடையெனை எதிர்த்து செல்லும் மீன்கள்போல்
சோதனையை சாதனையாக மாற்று

அன்பும் நட்பும் சங்கமித்து உருவானது காதல்
ஒப்பில்லாத உணர்வென்று உலகமே வியக்குதெடா
சொல்லித் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை
காதலித்துப் பார் அதன் அருமையும் பெருமையும்

தித்திக்கும் எண்ணங்கள் தினம் தினம் தோணுதடா-என்
அருகினில் நீ இருந்தால் இந்த அகிலமே என் சொந்தமடி
இதயம் சாகவில்லை இமைகள் மூடவில்லை- சாவிலும்
என் விண்ணப்பம் உயிரே உன்னைத் தொடர

உன் நினைவால் தீ இப்பவே எரியுதடி
காதல் நீர் ஊற்றி அணைக்க வா
என் இதயம் என்பதற்காக அல்ல அதில்
இருப்பவள் நீ என்பதற்காக

இழப்பினை சந்தித்த முதல் மனிதன் நானும் அல்ல
இழப்பு சந்தித்த முதல் மனிசி நீயும் அல்ல
சில கனிகள் பிஞ்சிலேயே வெம்புவது ஒன்றும் புதிதல்ல
இதுவும் அது போல தானோ தெரியாது.

                                                                        - எழுத்துரு நண்பன் கோபால்.

Thursday, July 21, 2011

உனக்கான உதிரிப் பூ

***
எந்தப் பொற்பாதங்கள்
என் இதயப் பாதையில்
நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை
உண்டாக்கினவோ...
எந்தப் பூவிழிகள்
என் நெஞ்சில்
புதிய புதிய
கனவுகளைப் படைத்தனவோ...
அவற்றிற்கு.....
***
 உன் கண்ணீரை மொழிபெயர்த்தேன்
அது கவிதையாயிற்று
உன் புன்னகையை மொழிபெயர்த்தேன்
அது சங்கீதமாயிற்று
முழுமையாக
உன்னையே மொழிபெயர்த்தேன்
அந்த உயிருள்ள மொழிபெயர்ப்பு
என்னையே மொழிபெயர்த்து
எழுதலாயிற்று!
***
கண்ணகி
காற்சிலம்பைக் கழற்றியதாள்
நான்
சிலப்பதிகாரம் படித்தேன்
நீ உன்
கைவளையல்களைக் கழற்றியதால்
என் தோழர்கள் இக்
கவிதையை வாசிக்கப்போகிறார்கள்!
***
உன் தோட்டத்தில்
எத்தனை அழகான பூக்களை
நீ வளர்த்திருக்கிறாய்!
ஆனால்
எல்லாப் பூக்களையும்விட
மிக அழகாக வளர்ந்த பூ
நீதான் பெண்ணே!
***


பாடசாலையை நோக்கிப்
பாதங்கள் நடந்த போது
உன்னுடைய பட்டுக் கரங்களால்
எத்தனை எத்தனை புத்தகங்களைத்
 தொட்டுத் தூக்கிச் சென்றாய்!
ஆனால்
எல்லாப் புத்தகங்களையும் விட
ஒரு புதுமையான புத்தகம்
நீதான் பெண்ணே!
***
சங்கீத அலை பரவும்
செளந்தர்யத் தேன் குரலில்
எத்தனை எத்தனை
இனிய பாடல்களை நீ
இசைத்தாய்!
ஆனால்
எல்லாப் பாடல்களையும் விட
இதயத்தை வருடியபடி
இனித்திருக்கும் பாடல்
நீதான் பெண்ணே!
***
ஆயிரம் கனவுகளை
உன்னை
யார் வளர்க்கச் சொன்னார்கள்?
நீ ஏன்
என்
நிழலோடு
சண்டை பிடிக்கிறாய்?
***
காவியங்கள் மட்டுமே
சந்திக்கக்கூடிய
சில நல்ல மனிதர்களை
வாழ்க்கையிலும்
சந்திக்க நேரும்போது
வாழ்த்தக்கூட முடிவதில்லை
வணங்கத்தான் தோன்றுகிறது
-என்றாய்

எனக்குத் தெரியும்
நீ வேண்டுவது
தொழுவதை அல்ல
தொடுவதை!
***
கல்யாணி ராகத்தைக்
காணாமல்
முகாரியிலேயே உன் பாடல்
முடிந்து விடுமோ?
எதற்கும்
பாகவதரைக் கேட்டுப் பார்!
***
நான் சூறாவளியாய்ப்
புறப்பட்டபோது
தனித்து விடப்பட்டதொரு
அனாதைச் செடியின்
ஒற்றை ரோஜாவாய் நின்று
என் இரக்கத்தைப்
பெற்றுக் கொண்டாய்.

பார்வைப் பூக்களால் என்
பாதங்களை அர்ச்சித்தாய்!

மெல்லிய பூங்காற்றாய்
உன் மேனியை வருட வந்தபோது
ஆயிரந் தலைவாங்கி
அபூர்வ சிந்தாமணியாய் மாறி
அவஸ்தைப் படுத்தினாய்

மழை நிழல் பிரதேசமாக
என்னை
மாற்றினாய்!
***
உன்னைக் கண்ட பிறகுதான்
நான்
கனவு காணக் கற்றுக் கொண்டேன்
இப்போது-
கனவுகளே உன்னை எனக்குக்
கற்றுத் தருகின்றன.

நீ புறப்பட்டபோது
என்னை மட்டுமே
அலட்சியப்படுத்துவதாக நினைத்தேன்
இந்த பூமியையே
அலட்சியாப்படுத்திவிட்டுப்
போய் விட்டாயே.

என் இரவே
கண்களாய் மாறிக்
கண்ணீர் சிந்தும்போது
பகலுக்கு நான்
என்ன
பதில் சொல்வது?
***
ஒரே ஒரு பூவுக்காக
நீ யாசித்தபோது
என் கூடை
காலியாயிருந்தது.

இப்போது
என் கூடையெல்லாம்
பூவாய்க்
குவிந்திருக்கும்போது
உன்
கல்லறையைப் பார்த்து
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன!
***
                                                                - மேத்தாவுடன் எனது கற்பனையும்

Tuesday, July 12, 2011

தண்ணீர் தேசம்...........1



கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?

இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோ டிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.

சிரித்தது அவன் நுரைத்தது கடல்

தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.

கலைவண்ணன் கரைமீண்டான்.
அவளை ஆதரவாய் அணைத்து
அங்கவஸதிரமாய்த் தோளில்
அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்
வேளை கன்னத்தில் சுட்டுவிரல்
கையெழுத்திட்டான்.

காதல் மண்டியிட்டான். காதில்
ஓதினான்....



                                                                                            கவிப்பேரரசின் பதிவு தொடரும்...

Saturday, July 9, 2011

முகம் தெரியாத அவளுக்காக...




***
இருண்ட இரவுகளில் உன் 
விழியின் ஒளியையே
விளக்காகக் கொண்டு
நான் எழுதும்
இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப் பார்ப்பவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.
***
பேசக் கூடாதா?
என்னதான்
மெளனம்
மொழிகளிலேயே சிறந்த
மொழியென்றாலும்
இன்னொரு மொழியைத்
தெரிந்து வைத்துக் கொள்வதில்
என்ன குற்றம்?
பேசு!
***
ஒரு மூங்கிற் காட்டையே
அழித்து
புல்லாங்குழல் செய்தேன்
ஊதும்போதுதான்
அது
ஊமையென்று தெரிந்தது
உன்னைப் போல்!
***
என் வீதியில்
எல்லா வாகனங்களும்
வருகின்றன-ஆனால்
எனக்கு மட்டும் 
இடம் இல்லை
என்கிறார்கள்
***
எத்தனை தேசங்கள்
சுற்றி வந்தாலும்
என் கால்கள்
உன் தெருவிற்கே
வந்து சேர்கின்றன
அவை அறிந்தது
உன் தெரு மட்டும் தான்
***
நிலவைப் பார்வையிடும்
நட்சத்திரங்களைப் போல
அணைந்தணைந்து எரியும் என்
ஆசைகள் உன்னைப்
பார்வையிடுகின்றன.
***
எத்தனை விருது கிடைத்தாலும்
இதயம்
நிறைவுபெற மறுக்கிறது
ஒரே ஒரு முறை உன்
கண்களால் என்னை
கெளரவிக்க மாட்டாயா?
***
என் செய்தியை 
நான் எழுதத் துடிப்பது
உன் இதயத்தில்தான்
அறிந்தும் அறியாதவள்போல்
நீ ஏன்
ஆட்டோகிராஃபை
நீட்டுகிறாய்?
***
வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிக்கிறது
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது
உனக்கெங்கே
புரியப்போகிறது?
***
இந்த ஆரவாரம்
எங்கிருந்து கேட்கிறது..
எங்கிருந்து??

என் நினைவுகளை
கொள்ளை கொண்ட
நீ
எங்கிருக்கிறாய்?
எங்கிருக்கிறாய்?
***
வீதியில் கொட்டும்
போர் முரசுதான்
வீட்டுக்கு வந்ததும்
வீணையாகி விடுகிறது!

அதுவும் 
சோக கீதத்தை மட்டுமே
மீட்டுகின்றது
***
எந்தச் சோக வீணையையும்
தூக்கிச்
சுமக்க வேண்டியிருக்காது
நீ மட்டும் என்
தோளில் இருந்தால்!
***
என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களைப் பயிரிட்டேன்
அறுவடை செய்ய 
உன்னை அழைத்தேன்
அரிவாளோ
நீ வந்த பிறகுதான்
என் தவறு
எனக்குப் புரிந்தது!
***
சில பேர் காவியங்களைப் படைக்கிறார்கள்
சிலர் காவியங்களில் வாழ்கிறார்கள்
என்றேன்.

காவியமாகவே வாழ்ந்து விடுகின்றேன்
என்றாய்!

எழுதி வைக்கப்படாத
எந்தக் காவியமும்
நிலைக்காது என்பதை
நினைத்துப் பார்த்தாயா?
***
கனவுகளை நான் வெறுக்கிறேன்
அவை எத்தனை
அழகாய் இருந்தாலும்,

நிழல்களின் ஒப்பந்தங்களைவிட
நிஜங்களின் போராட்டமே
எனக்குப் பிடிக்கும்.

உன் பிடிவாதம்
எனக்குப் பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது!

நீ
நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான்
நானாக இல்லை.
***
தொட முடியாத
தொலைவில்
இருப்பதாகக்
கனவு காணாதே!

இந்த பூமியின்
விளிம்பையே
தீண்டிவிடும்
அளவிற்கு
என் விரல்கள்
நீளமானவை.

ஏனென்றால்
என் கைகள்
வெறும் கைகளல்ல...

கவிதைகள்!
***


                   - மு.மேத்தாவுடன் என் கற்பனையும்










குறிப்பு: இந்தத் தளத்தை உங்களுடைய ஃபேஸ்புக்குடன் இணைத்துக் கொள்ள

FB ஐ நோக்கி எனது தளம்.......



இதிலுள்ள like button ஐ அழுத்தவும். நான் இடும் இடுக்கைகளை உடனுக்குடன் உங்கள் fb இல் காணமுடியும்.
                - நன்றி.