Thursday, September 8, 2011

தண்ணீர் தேசம்...........2

தமிழ்ரோஜா

அதைவிட சுகமாக
அம்சத்வனிராகம்கூட அவள்
பெயரை உச்சரித்திருக்க
முடியாது.

காதல் அழைக்கும் போதுதான்
பெயர்வைத்ததன்
பெருமைபுரிகிறது.

அந்த சுகம் மீண்டும் அவளுக்கு
வேண்டியிருந்தது. அதனால்
உம் கொட்டாமலிருந்தாள்.

தமிழ்ரோஜா

- இப்போது அவன் அழைத்தது
தோடிராகம்.

உம் என்றாள் தமிழ்.

தண்ணீருக்கு நீ பயந்தால்
உன்னைக்கண்டு நீயே
பயப்படுகிறாய் என்று
அர்த்தம்.

புரியவில்லை.

உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான்.

உடம்பில் ஏன் உப்புநீர்
ஓடுகிறது?

கடற்கொடை. தாய்தந்த
சீதனம். முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த
உறவுத் திரவம்.

முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?

கலையின் கழுத்தைக்
கட்டிக்கொண்டாள் தமிழ்.
ஒருவருக்கான காற்றை
இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்
உண்மை உளறினான்.

கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

ஆகா, என்று ஆச்சரியம்
காட்டிய தமிழ் அவன் முகத்தில்
முள்குத்தாத பிரதேசம்தேடி
முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்
பரவக்கண்டவன், அவள்
கழுத்தடியில் கைபதித்துக்
குளிரக்குளிரக் குறுமுடி
கோதினான். குழந்தையே.
என் குழந்தையேஎன்று
கொஞ்சினான்.

புரிகிறதா? கடல் நம்
தாய். தாய்கண்டு தமிழ்
அஞ்சலாமா?

தாயென்றால் பூமியை அவள்
ஏன் புசிக்க வேண்டும்?

அவள் மீது குற்றமில்லை.
கடலின் கீழேநகரும் பாறைகள்
அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை.
கடல் தந்த அனுமதியால்தான்
முழ்காத நிலப்பகுதி முச்சுவிட
முடிகிறது.

கடல்நீர் இடம்மாறி
நிலப்பரப்பில் நின்றால் எல்லா
இடங்களிலும் முன்று
கிலோமீட்டர் உயரம். தண்ணீர்
நிற்கும்.

புள்ளிவிரம் சொல்லியே
பொழுது
போக்கிவிட்டீர்கள்.

சரி, நல்லவிவரம்
சொல்லட்டுமா? ஒரு
முத்தத்தில் எத்தனை வோல்ட்
மின்சாரம்தெரியுமா?

போதும். போதும்.
புள்ளிவிவரப் புலியே.
ஆளைவிடுங்கள்.

விடமாட்டேன். வா.

தண்ணீரில் நனை அல்லது
தண்ணீரை நனை. அலையோடு
விளையாடு.

தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்
சொல்லாத இடங்களில்
விழுகையில் இல்லாத அனுபவம்
எழுமே....
அந்த சுகம் துய்.

எத்தனை மனிதர்
கடல்பார்த்தனர்? எத்தனை
மனிதர் இதில் கால்வைத்தனர்?

வா. இந்தச் சிற்றலையில்
கால் வைத்து யாரும் செத்துப்
போனதில்லை.

தண்ணீர் பயம் தவிர்.
சொட்டச் சொட்ட நனை.
கிட்டத்தட்டக் குளி.
நீரின் பெருமை நிறையப்பேர்
அறியவில்லை. காதலி பெருமை
பிரிவில். மனைவி பெருமை
மறைவில். தண்ணீரின் பெருமை
பஞ்சத்தில். அல்லது
வெள்ளத்தில்.

நீ உணவில்லாமல் ஒருமாதம்
வாழலாம். நீரில்லாமல்
ஒருவாரம் வாழமுடியாது.
தண்ணீர்தான் உயிர். இந்தக்
கடல் அந்த உயிரின் தாய்.
தாயோடு தள்ளி நிற்பதா?
வா.

எட்டி நின்றவளைக் கட்டிப்
பிடித்தான். திமிறினாள்.
வாழைத்தண்டாய்
ஓடிந்தாள். வாளை மீனாய்
வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான். அவள்
பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த
விளையாட்டுமட்டும்
வேண்டாம்.

என்னோடு வாழ்ந்தால் நீ
நெருப்புப் பள்ளங்கள் தாண்ட
வேண்டியிருக்கும். நீர்கண்டு
பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.
தண்ணீர்தான் பயம்.
அவன் தூக்கமுயன்றான். அவள்
துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.
நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்
சேர்த்தெடுத்தான். அவளைச்
சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்
நீச்சலடித்தாள். இடுப்பளவுத்
தண்ணீரில் இறக்கிவிட்டான்.
அஞ்சினாள். தண்ணீரின்
ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்
பற்றினாள். அவன் உதறி
ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த
அலைகள்கண்டு அலறினாள்.
பிரமைபிடித்துப்
பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து ஒரு பேரலை
அவள் பெயர் சொல்லிக்
கொண்டே படைதிரட்டி
வருவதாய்ப் பட்டது அவளுக்கு.
அவ்வளவுதான்.
அவள் ஞாபகச்சங்கிலி
அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்
மோதுதலில் தன்னிலை குலைந்து
தடுமாறி எழுந்து ஒருகணம்
மிதந்து மறுகணம் அமிழ்ந்து
மீண்டும் எழுந்து மீண்டும்
விழுந்தாள். அலைகளில்
தொலைந்தாள்.


கவிப்பேரரசின் பதிவு தொடரும்...

No comments:

Post a Comment