Saturday, September 10, 2011

இவர்களையும் காதலிப்போம்.

வயது கொள்ளும் விபரீத ஆசைகள், ஒவ்வொரு பருவத்திலும் ஒன்றின் மேல் ஆசை, இது தான் மனித இயல்பு. மீசை அரும்பும் வயதில் வெவ்வேறு ஆசைகள் தோன்றும். அது எமது உடம்பு ஏற்படுத்தும் பரினாமத்தின் வளர்ச்சி.     உடம்பின்பரினாமத்திற்கேற்ப மனதும் மாறுதலடையும். 

வீட்டாரின் அரவணைப்பில் இருந்து விலத்தும் போது பல தரப்பட்ட நண்பர்களின் சேர்க்கைகளுக்கிடையில் மனம் முட்டி மோதி தனக்கேற்றால் போல் வியூகம் அமைத்து தன் போக்கில் செல்ல எத்தனிக்கும். 

தன்னைச் சுற்றி நடப்பவற்றை வித்தியாசமாக பலதரப்பட்ட கோணங்களில் உற்று நோக்கும். நல்லவை பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாது. தேவையற்றதையே மனம் நாடும். அதற்குள் செல்லவே குரங்கு மனம் எத்தனிக்கும். யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. பட்டு புத்தி வரும் வரை சித்தம் தெளியாது.

பிறர் செய்வதைப் போலவே தானும் செய்ய ஆசைப்படும். தனக்காக தன்னைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி மற்றவர்கள் தன்னை என்ன நினைப்பார்களோ என நினைத்து மற்றவர்களுக்காக வாழத் தொடங்கும். 

கட்டுக்கடங்காத மனது, கடிவாளம் போட நினைத்தாலும் போடுவதற்கு முடியாது. எங்கள் மனதோடு போட்டியிட்டே எமது மனமே தோற்றுவிடும். இது காதலிற்கே சாத்தியமாகும். 

தன்னை மறந்து, தனைப் பெற்றவரை மறந்து, தன் உடன் பிறப்புகளை மறந்து அதுமட்டுமா தன் நண்பர்களையும் பிரிந்து அறிமுகமில்லாதவளுக்காக அலையில் அடிபட்ட துரும்பு போல சக்தியற்று பித்தனைப் போல திரிவதும் காதலுக்கு மட்டுமே சாத்தியமானது.

கண்டவுடன் காதல், காணாமல் காதல் இந்த இரண்டிலுமே உடன்பாடு இருந்தாலூம் தனது காதலை வெளிப்படுத்தும் முன் தன் குடும்பத்தை நினைக்காமல் எவனும் இருக்கமாட்டான் என்பதே எனது கருத்து. இதனை எவராலும் மறுக்க முடியாது.அவ்வாறு மறுப்பவன் மனிதனாக இருக்க முடியாது.

ஆனால் காதல் என்ற போதையில் இலட்சக்கணக்கான நரம்புகளின் தூண்டுதலில் பாச நரம்புகள் செயல் இழந்து போய்விடுமோ???  இருக்காது என்பது தான் என் எண்ணம்.  உங்கள் பார்வையிலும் இவ்வாறே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. 

சரி!!! காதலும் ஆகிவிட்டது... மாணவப்பருவம் காதலின் வசந்தகாலம். கண்முன் தெரியாமல் காதல்வயப்படும். எதைப் பற்றியும் யோசிக்காது. தங்கள் சந்தோசத்தையே பெரிதாக நினைக்கும். எதிர்ப்புகள் வந்தாலும் எதிர் நீச்சல் அடிப்போம் என்று சொல்லிச் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும். 

ஒன்று மட்டும் எம்மை நாமே கேட்க வேண்டும். (மாணவப் பருவத்தில்) சொந்தச் செலவில் காதலியை அலங்கரித்திருப்பீர்கள். அப்படி அலங்கரிக்கும் உரிமையை யார் தந்தது நமக்கு...??? எனக்கே சொந்தமில்லாத காசில் அவளுக்கு நான் எவ்வாறு பொருட்களை வாங்கித்தர முடியும். சரி!!! பெரியவர்கள் சொல்வார்கள் இருப்பதை மற்றவனுக்கும் கொடு அது உனக்குத் தானாக வரும் என்று!!! பெரியவர்கள் கூற்று மதிக்கத் தான் வேண்டும், ஆனால் எனக்கே சொந்தமில்லாத பொருளை எவ்வாறு நான் பகிர்ந்து கொள்ள முடியும். 

ஆக!!! பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்வதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கும்.  படிக்கச் செல்லும் மகன் ஒருத்தியுடன் ஊர் சுற்றுகிறானாம் என்று கேட்டவுடன் தாய் மனம் எவ்வளவு பாடுபடும். அப்பா எவ்வளவு கஸ்ரவப்படுவார். உழைப்பவனுக்குத் தான் தெரியும் 1 ரூபா உழைப்பதே எவ்வளவு கஸ்ரம் என்று. 

காதலிக்க முன்பு ஒருவன் இவ்வாறு யோசிப்பான் ஆயின் காதலில் ஆசை இருந்தாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வான். தன் பிள்ளையின் காதல் விளையாட்டுக்கள் தெரிந்தும் தெரியாது இருக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். அதை பெரிய விடயமாக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். அது பெற்றவர்கள் மன நிலையைப்பொறுத்தது.

இதுவரை காலமும் நாம் சொன்னதைத் தானே செய்தான் இதையாவது அவன் விருப்பத்திற்கு செய்யட்டும் என்று விட்டு விடும் பெற்றோரும் உண்டு. இவ்வளவு காலமும் என்ன செய்ய வேண்டும் என்று செய்த எமக்கு இதை செய்யத் தெரியாதா என்று நினைக்கும் பெற்றோரும் உண்டு.

அது அவர்களின் சுயநலம் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் தோளுக்கு மேல் வளர்ந்தாலும் பெற்றவர்களுக்கு குழந்தை குழந்தை தான். அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் பயம் இது வரைக்கும் எல்லா நல்லது கெட்டதும் நாம் தான் செய்து விட்டோம். சுயமாக அவன் எடுக்கும் முடிவில் பிழை விட்டு விடுவானோ என்ற பயத்தின் மேலீட்டாலேயே மறுப்புக்கள் தோன்றுகின்றன. 
மற்றும், பிள்ளை பிறந்து 1 ஆவது பிறந்தநாளில் இருந்து ஒவ்வொரு தினத்திற்கும் தம் விருப்பத்திற்கு அழகு பார்த்தவர்கள் தம் பிள்ளை மணநாள் காணும் போதும் தம் விருப்பத்திற்கே அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். இது யதார்த்தமாக அனைவருக்கும் வரும் ஆசையே.

அனைவருக்கும் வரும் காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் அது எனக்கு அமையவில்லை. ஆனால் அது கைகூடாதற்கு கடவுளுக்கு இப் பொழுது நன்றி கூறுகின்றேன். அம்மாவுடன் எப்போதும் ஜோக்காக கதைப்பது வழக்கம். அவ்வாறு கதைக்கும் போது தான் என் தாய் என் எதிர்காலக் கனவினை வெளிப்படுத்தினார். என் எதிர்காலம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.  அதைக் கலைத்தால் அந்த தாய் என்னும் ஓவியமே சிதைந்து விடும். அப்படியோர் பாவத்தினை செய்ய இனி மேலும் என் மனம் இடம் கொடுக்காது.

அனைவருக்கும் நான் தரும் அன்புக் கட்டளை. முடிந்தவரை உங்கள் பெற்றோரிடம் வாய் விட்டுக் கதையுங்கள். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய இயன்றவரை போராடுங்கள். எமக்காக தம்மை தியாகம் செய்தவர்களிற்காக எமது அற்ப ஆசைகளை தியாகம் செய்வதில் எந்த வித நட்டமும் ஏற்பட்டுவிடாது. 

                              “ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ”
பெற்றவர்களின் ஆசையை நீங்கள் நிறை வேற்றுங்கள் உங்கள் ஆசைகள் தெய்வத்தால் நிறை வேற்றப்படும்.


இந்தப் பதிவு பெற்றோரை கடவுளாக மதிப்போர்களுக்காக எழுதப்பாட்டுள்ளது.
இயன்றவரை இந்த பதிவை பிரபல்யப்படுத்துங்கள்.
நன்றி- சேர்க்கைகளுக்காக இ.சுகானன்
 


No comments:

Post a Comment