Tuesday, September 13, 2011

நேர்மறையாகவே சிந்தியுங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள். எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த துன்பத்திலும் நிச்சயம் நன்மை இருக்கும். அன்னப் பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும். இருந்தே தீரும்.


 “ நீ செல்லும் பாதை இலகுவானது எனின் அது ஏற்கனவே 
   வேறு ஒருவனால் பாவிக்கப் பட்டதாகத் தான் இருக்க முடியும்

மற்றவர்களிடம் குறை காணுவதை விடுத்து உங்களுக்குள் என்ன நடக்கிறது எனக் கவனியுங்கள். உங்கள் ஆழ் மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் இலட்சியத்திற்குத் தயார்ப்படுத்துங்கள்.

அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புக்களை மட்டுமே பயன்படுத்த முயல்வோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவர்களுக்கும் வாய்ப்பை வழங்குவோம். எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடோடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விடுத்து, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள். 

வெற்றியும் மகிழ்ச்சியும் எம்முடன் பயணிக்கும் பயணங்கள் தான். அவை ஒரு போதும் குறிப்பிட்ட முற்றுப்புள்ளிகள் ஆகாது. எம்மால் ஒரு போதும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இறுதி முடிவாக மகிழ்ச்சியையோ வெற்றியையோ கண்டு கொள்ள முடியாது. மாறாக நாம் வெற்றி மற்றும் மகிழ்ச்சி என்பன காணப்படுகின்ற பாதைகளைத் தெரிவு  செய்து எமது பயணங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு பயணப்படுகையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் எம்மால் கண்டு கொள்ள முடியாவிட்டால் அவற்றை எம்மால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது.

ஒரு நிகழ்வு நிகழவில்லை எனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள். 

வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்த தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலத்துங்கள். 

மனிதனுக்கு விரோதி என்று உள்ளது எனில் அது தனிமையைத் தவிர வேறு    எதுவுமாக இருக்க முடியாது.


மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்த இடம் காலி இடம். நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் இலட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!!!

எவரும் அவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு ஏற்ற வகையில் வெற்றி காண்பார்கள். மகிழ்ச்சியே உருவாய் அமையும். வாழ்க்கையை தம்வசம் கொண்டிருப்பார்கள். 

வாழ்வில் சின்னச் சின்ன விடயங்களிலேயே மகிழ்ச்சி பொதிந்து காணப்படும். இன்னொருவருக்கு நாம் செய்யும் உதவியால் நாமடையக் கூடிய மகிழ்ச்சியைப் பற்றி வார்த்தைகளால் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. 

அது தான் வாழ்க்கை ! அங்கே தான் மகிழ்ச்சிப் பிரவாகம் ஓயாமல் நிகழ்கிறது. எமக்கு பிரியமானவர்களை இழந்த போது நாமடையும் கவலையும் மற்றவர்களுக்கு நாம் செய்யும் நல்ல விடயங்களால் பரிவர்த்தனை கூட செய்து கொள்ள முடியும்.

 “ பெரும்பாலும் எதிர் பார்ப்புக்களைப் பற்றிய பாரதூரமான கனவுகள் எம்மைப் பலவீனர்களாகவே மாற்றும். அடுத்த கணப் பொழுதைக் கூட நினைத்துப் பார்க்காதவன் பயமற்ற வாழ்க்கையை வாழ்கிறான்.

சேர்க்கைகளுக்காக......சுகானன்.

No comments:

Post a Comment