Thursday, July 21, 2011

உனக்கான உதிரிப் பூ

***
எந்தப் பொற்பாதங்கள்
என் இதயப் பாதையில்
நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை
உண்டாக்கினவோ...
எந்தப் பூவிழிகள்
என் நெஞ்சில்
புதிய புதிய
கனவுகளைப் படைத்தனவோ...
அவற்றிற்கு.....
***
 உன் கண்ணீரை மொழிபெயர்த்தேன்
அது கவிதையாயிற்று
உன் புன்னகையை மொழிபெயர்த்தேன்
அது சங்கீதமாயிற்று
முழுமையாக
உன்னையே மொழிபெயர்த்தேன்
அந்த உயிருள்ள மொழிபெயர்ப்பு
என்னையே மொழிபெயர்த்து
எழுதலாயிற்று!
***
கண்ணகி
காற்சிலம்பைக் கழற்றியதாள்
நான்
சிலப்பதிகாரம் படித்தேன்
நீ உன்
கைவளையல்களைக் கழற்றியதால்
என் தோழர்கள் இக்
கவிதையை வாசிக்கப்போகிறார்கள்!
***
உன் தோட்டத்தில்
எத்தனை அழகான பூக்களை
நீ வளர்த்திருக்கிறாய்!
ஆனால்
எல்லாப் பூக்களையும்விட
மிக அழகாக வளர்ந்த பூ
நீதான் பெண்ணே!
***


பாடசாலையை நோக்கிப்
பாதங்கள் நடந்த போது
உன்னுடைய பட்டுக் கரங்களால்
எத்தனை எத்தனை புத்தகங்களைத்
 தொட்டுத் தூக்கிச் சென்றாய்!
ஆனால்
எல்லாப் புத்தகங்களையும் விட
ஒரு புதுமையான புத்தகம்
நீதான் பெண்ணே!
***
சங்கீத அலை பரவும்
செளந்தர்யத் தேன் குரலில்
எத்தனை எத்தனை
இனிய பாடல்களை நீ
இசைத்தாய்!
ஆனால்
எல்லாப் பாடல்களையும் விட
இதயத்தை வருடியபடி
இனித்திருக்கும் பாடல்
நீதான் பெண்ணே!
***
ஆயிரம் கனவுகளை
உன்னை
யார் வளர்க்கச் சொன்னார்கள்?
நீ ஏன்
என்
நிழலோடு
சண்டை பிடிக்கிறாய்?
***
காவியங்கள் மட்டுமே
சந்திக்கக்கூடிய
சில நல்ல மனிதர்களை
வாழ்க்கையிலும்
சந்திக்க நேரும்போது
வாழ்த்தக்கூட முடிவதில்லை
வணங்கத்தான் தோன்றுகிறது
-என்றாய்

எனக்குத் தெரியும்
நீ வேண்டுவது
தொழுவதை அல்ல
தொடுவதை!
***
கல்யாணி ராகத்தைக்
காணாமல்
முகாரியிலேயே உன் பாடல்
முடிந்து விடுமோ?
எதற்கும்
பாகவதரைக் கேட்டுப் பார்!
***
நான் சூறாவளியாய்ப்
புறப்பட்டபோது
தனித்து விடப்பட்டதொரு
அனாதைச் செடியின்
ஒற்றை ரோஜாவாய் நின்று
என் இரக்கத்தைப்
பெற்றுக் கொண்டாய்.

பார்வைப் பூக்களால் என்
பாதங்களை அர்ச்சித்தாய்!

மெல்லிய பூங்காற்றாய்
உன் மேனியை வருட வந்தபோது
ஆயிரந் தலைவாங்கி
அபூர்வ சிந்தாமணியாய் மாறி
அவஸ்தைப் படுத்தினாய்

மழை நிழல் பிரதேசமாக
என்னை
மாற்றினாய்!
***
உன்னைக் கண்ட பிறகுதான்
நான்
கனவு காணக் கற்றுக் கொண்டேன்
இப்போது-
கனவுகளே உன்னை எனக்குக்
கற்றுத் தருகின்றன.

நீ புறப்பட்டபோது
என்னை மட்டுமே
அலட்சியப்படுத்துவதாக நினைத்தேன்
இந்த பூமியையே
அலட்சியாப்படுத்திவிட்டுப்
போய் விட்டாயே.

என் இரவே
கண்களாய் மாறிக்
கண்ணீர் சிந்தும்போது
பகலுக்கு நான்
என்ன
பதில் சொல்வது?
***
ஒரே ஒரு பூவுக்காக
நீ யாசித்தபோது
என் கூடை
காலியாயிருந்தது.

இப்போது
என் கூடையெல்லாம்
பூவாய்க்
குவிந்திருக்கும்போது
உன்
கல்லறையைப் பார்த்து
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன!
***
                                                                - மேத்தாவுடன் எனது கற்பனையும்

1 comment:

  1. Nice da இன்னும் வரட்டும்.......

    ReplyDelete