Tuesday, March 27, 2012

மோகத்தை வாழவிடு !!!

வைரமுத்துவின்,,,,,,,
 மோகத்தை வாழவிடு !!!

பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவின் உன் பேரழகை
திருடாமல் போவேனோ???

வானே இடிந்தாலும் 
வையம் நகர்ந்தாலும் 
தேனே உன் பொன்னுடலம்
தீண்டாமல் போவேனோ???

ஏதேனும் மின்னல் வந்து 
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ???

வெளியே தீவிழுந்து 
வீதி எரிந்தலும் 
கிளியே உன் நுனிமூக்கைக்
கிள்ளாமல் போவேனோ???

ஒருநாள் ஒரு பொழுது
உன்மடியில் நானிருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ???

நீலக் குழல் விலக்கி
நெற்றியிலே முத்தமிட்டுக்
காலகதி மறக்காமல்
கண் மூடிப் போவேனோ???

நீராக மாறிஉந்தன்
நெற்றியிலே நானிறங்கிக்
கூரான மார்பில்
குதித்துவிட மாட்டேனோ???

மோகச் சிகரத்தில்
மோட்சநிலை காணாமல்
சாகப் பிறந்தவன் போல்
சட்டென்று போவேனோ???

தங்க விரல்தடவி
தளிர்தடவி மலர்தடவி
அங்கத்தில் அத்வைதம்
அடையாமல் போவேனோ???

பேச்சிழந்த வேளையிலே
பெண்ணழகு என் மார்பில்
மூச்சுவிடும் வாசனையை
முகராமற் போவேனோ???

என்நினைவு மெல்லமெல்ல
என்னைவிட்டுப் போகையிலும்
உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனோ???

கண்ணுக்குள் கண்வைத்துக்
கண்ணிமையால் கண்தடவிச்
சின்னதொரு சிருங்காரம்
செய்யாமற் போவேனோ???

மின்மினிப் பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்துக்
கைதட்ட மாட்டேனோ???

வட்ட நிலாச் சாறு
வடிகின்ற ராத்திரியில்
கட்டழகே உன் நிழலைக்
கண்டுவிட மாட்டேனோ???

உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
திலகத்து நெற்றியிலே
தீட்டிவிட மாட்டேனோ???

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ???

தலையெல்லாம் பூப்பூத்து
தள்ளாடும் மரம்ஏறி
இலையெல்லாம் உன்பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ???

சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ???


No comments:

Post a Comment