ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான்.
சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில் மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.
அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20. தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான்.
அமுதாவின் புலம்பல்
அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக் கொஞ்சம் ஆணவமும் கொண்டிருந்தாள்.
’எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம். இந்தச் சின்ன வயதில் எனக்கு இவ்வளவு கடினமான சூழ்நிலையா’ என அமுதா அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவற்றை ராமு கவனித்துக் கொண்டே வந்தான்.
‘ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்ன வாழ்க்கை இது?’ என நாளுக்கு நாள் அவள் புலம்பல் இன்னும் அதிகரித்து கொண்டிருந்தது.
ஒரு நாள் ராமு அமுதாவை அழைத்து, ‘ஏன் அம்மா இப்படி புலம்பிக் கொண்டே இருக்கிறாய்? கஷ்டங்கள் அனைவருக்கும் பொதுவானது தான். வாழ்க்கை என்றால் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும். இதற்காக வாழ்கையை வெறுக்கக் கூடாது’ எனப் புரிய வைக்க முயன்றான்.
‘இல்லை அப்பா, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இந்தக் காலத்துல எங்களுக்கு 1008 பிரச்சனை இருக்கு. அதெலாம் சொன்ன உங்களுக்குப் புரியாது. நீங்க இன்னும் உங்க காலத்துலையே இருக்கீங்க’ என்றாள் அமுதா.
‘காலம் என்னம்மா காலம், கஷ்டங்கள் என்றும் ஒன்று தான். சொல்லப் போனால் அன்று எனக்குக் கிடைக்காத பல இன்பங்களும் வாய்ப்புகளும் இன்று உங்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்றும் வாழ்வின் இன்பங்களை எண்ணி பார்க்க வேண்டும் துன்பங்களை அல்ல’ என்று மீண்டும் புத்தி மதி கூற முயற்சித்தான்.
‘அப்பா சமையல் போல எல்லாம் எளிதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ எனக் கூறினாள் அமுதா. அவள் கொண்ட ஆணவம் ராமு கூறும் உண்மைக்குச் செவி சாய்க்க விடாமல் அவளைத் தடுத்தது.
மூன்று பொருட்கள்
ராமுவிற்கு புரிந்து விட்டது, இனி அமுதாவிடம் பேசிப் பயன் இல்லை என்று. ‘சரி அம்மா. எனக்குப் புரியவில்லை தான். என்னுடன் சமையல் அறைக்கு வா’ என அமுதாவை அழைத்துச் சென்றான் ராமு.
அடுப்பில் மூன்று பாத்திரங்களை வைத்தான். அதில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்தான். ‘என்ன அப்பா செய்றீங்க? எதற்கு என்ன கூட்டிட்டு வந்தீங்க? படிக்க நிறைய இருக்கு நான் போகணும்’ எனப் பொறுமையின்றி தவித்தாள்.
‘சிறிது நேரம் பொறு அமுதா’ என அவளை நிதானப் படுத்தினான் ராமு. ஒரு உருளைக்கிழங்கு ஒரு முட்டை மற்றும் சிறிது காபி கொட்டைகளை எடுத்து வந்தான். ‘அமுதா இந்த மூன்றையும் ஒரு ஒரு பாத்திரத்தில் போடு’ என மூன்று பொருட்களையும் அமுதாவின் கையிலே கொடுத்தான். கொத்திக்கும் நீரில் மூன்று பொருட்களையும் போட்டபின், அடுப்பின் தீயை இன்னும் அதிக படுத்தினான் ராமு. சிறிது நேரம் கழித்து மூன்று பாத்திரங்களையும் எடுத்து உள்ளே போட்ட பொருட்களைத் தட்டில் வைத்தான்.
‘அமுதா, இதோ இந்த உருளை கிழங்கு இப்பொழுது எப்படி உள்ளது’ என ராமு கேட்க, ‘மென்மையாகி விட்டது அப்பா’ என்றாள் அமுதா.
‘இந்த முட்டை?’
‘கீழே போட்டால் உடையும் முட்டை, இனி உடையாதது போல அதன் புற பகுதி வலு பெற்று உள்ளது அப்பா.’
‘சரி அமுதா அந்தக் காபியை ஊற்று’
இருவரும் காபியை ஊற்றிக் குடித்தனர். காபியின் சுவை அமுதாவிற்கு இன்பம் அளித்தது.
‘இது எப்படி உள்ளது?’ கேட்டான் ராமு.
‘மிகவும் அருமை அப்பா’ அமுதா சிரித்துக் கொண்டே கூறினாள்.
‘இது தான் வாழ்க்கை அமுதா. வாழ்கையின் துன்பங்கள் வெந்நீரை போலச் சுடும். நாம் கடுமையாக அந்த உருளைக் கிழங்கைப் போல இருந்தால் மென்மையாகி விடுவோம். மென்மையான முட்டையைப் போல இருந்தால் கடுமையாகி விடுவோம். ஆனால், அந்தக் காபி கோட்டைகள்போல வெந்நீரோடு கலந்து அவற்றை ஏற்றுக் கொண்டால், வாழ்க்கையே சுவையாகி விடும். நீ எதைத் தேர்ந்தெடுக்க போகிறாய்?’ என்றான் ராமு.
‘காபி கோட்டைகள். அதுவே வாழ்கையை மகிழ்ச்சியாக வாழுவதற்கு வழி, உணர்ந்துக் கொண்டேன்.
உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதற்கு மன்னித்து விடுங்கள் அப்பா. அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை. நீங்கள் தான் சிறந்த அப்பா!’ எனத் தன் தவறை உணர்ந்து வாழ்வின் உண்மையான ரகசியத்தை மனதால் ஏற்றுக் கொண்டாள் அமுதா.
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment