Saturday, August 3, 2024

பொறுப்பற்ற பதில் கூறல்கள்...




 அண்மையில் ஆசிரிய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது....


அவன்: வணக்கம் அண்ணா...


நான்: ஓம் வணக்கம், சொல்லடா! என்ன கதை...


அவன்: அண்ணா, கல்வியும் இணைபாடச் செயற்பாடுகளுமா? அல்லது இணைபாடச் செயற்பாடுகளும் கல்வியுமா?


நான்: அது ஒவ்வொரு பாடசாலையையும் பொறுத்ததுடா. ஏன் கேக்கிறா?


அவன்: 


அண்ணா, ஆங்கில தினப் போட்டி; தமிழ் தினப் போட்டி, ஒலிம்பியாட் போட்டி, கடேட்,கோட்டம், வலயம், மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள், பள்ளிக்கூட விழாக்கள் இப்படி பலதும் நடக்குது. வகுப்புக்கு போனால் குழுவகுப்புகளில் இருக்கிற பிள்ளைகளை விட குறைவான பிள்ளைகள் இருக்குது. அவங்களுக்கு படிப்பிக்க தொடங்கினால் zoom வகுப்பில் இருந்து படிப்பிக்கிற மாதிரி இருக்கு. மாகாணம் வேற பரீட்சை நேரசூசி போட்டிட்டு. 


சரி மேலதிக வகுப்பு காலமை போடுவம் என்றால் அதிலேயும் 6,7 தான் வருது. இது என்ன கொடுமை என்று நிர்வாகத்துக்கு சொன்னால்..........


நான்: ஏன்டா இழுக்கிறா?


அவன்: நீங்கள் பேப்பர் மார்க்கிங் என்று லீவு எடுக்கிறது, செமினார் என்று லீவு எடுக்கிறது, சொந்த லீவுகள் எடுக்கிறது பிறகு பிள்ளை வரேல்லை என்று வந்து நிக்கிறது. இப்படி என்னில பழி போடுறாங்கள் அண்ணா. 


அண்ணா நான் லீவால பிள்ளை இழந்த கல்வியை கொடுக்க தானே மேலதிக வகுப்பு எடுக்கிறன். இது ஏன் அவங்களுக்கு விளங்கேல்லை?


அண்ணா அத விட பெரிய கொடுமை என்ன என்றால் எங்கள் பாடசாலைக்கு விளையாட்டு பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் நியமிச்சு இருக்கு அதனால அவங்களுக்கு நாங்கள் பிள்ளைகளை காலை 6.15-7.15 வரைக்கும் கொடுக்கோனும் பின் நேரம் 3 மணிக்கு பிறகு குடுக்கோனும் உங்களுக்கு விரும்பினால் மதியம் 1.30-2.30 வரைக்கும் வகுப்பு எடுக்கலாம். காலமை வகுப்பு எடுக்கிறது என்றால் விளையாட்டுக்காரரோட கதைச்சு முடிவு எடுங்கோ என்று சொல்லினம். 


நான்: நீ அப்ப விளையாட்டுகாரரோட கதைச்சு வகுப்பு போடன். 


அவன்: அண்ணா நீ என்ன லூசு மாதிரி கதைக்கிறா. மேலை ஒருக்கால் திரும்ப வாசி. 7.30-1.30 நேரத்தில் பிள்ளைகள் வகுப்பில் இருந்தால் எதுக்கு மேலதிக வகுப்பு. அதுக்குள்ள எங்கள் நேரத்தை எடுக்கிறதால தானே நாங்கள் மேலதிக வகுப்பு எடுக்க வேண்டி இருக்கு. 


என்ன அண்ணா ஒன்றும் சொல்லாமல் இருக்கிறா?


நான்: சொன்னால் பேசுவாய், அது தான் பேசாமல் இருக்கிறேன். 


அவன்: பரவாயில்லை. சொல்லு அண்ணா?


நான்: அந்த மூளை செத்த நேரம் பி.ப 1.30-2.30 எடுக்க வேண்டியது தான். 


அவன்: அண்ணா என்று பார்க்கிறன். இல்லாட்டி வாய்க்க ஏதாவது வந்திடும்.....


அன்பான பாடசாலை நிர்வாகத்தினரே,


சமாந்தர வகுப்புகளில் 150 - 200 வரையான அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் இணைபாட விதான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் மாணவர்களினால் பாட அடைவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாக தெரியாது. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும். 


மாணவர்களை இணைபாட விதான செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காதவாறு உங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் செயற்பாடுகளால் அவர்கள் வகுப்பறைகளில் இழந்த கல்வியை மீட்டெடுக்க ஏதாவது மாற்று ஒழுங்குகளை செய்து கொடுங்கள். கிராம புற மாணவர்கள் பொருளாதார வசதியோ கல்வி பற்றிய விழிப்புணர்வோ இல்லாத பெற்றோரை கொண்டவர்கள். ஆகவே குறித்த மாணவர்களின் நலனில் நிர்வாகம் தான் அக்கறை செலுத்த வேண்டும். 


தினவரவு இடாப்பில் அவனுக்கு வரவு தான் இருக்கும். ஆனால் பயிற்சி கொப்பியில் அவனது பாடப்பரப்பு விடயங்கள் முழுமையாக இருக்காது. விடய உள்ளடக்கம் தெரியாதவனுக்கு கடைசி நேரங்களில் நீங்கள் கணக்கு காட்டுவதற்காக மேற்கொள்ளும் கருத்தரங்குகளால் எப்பயனும் கிடைக்காது. 


இந்த பொறுப்பற்ற நிர்வாக செயற்பாடுகள் உங்கள் ஓய்வுகால நின்மதியைக் கெடுக்கும் என்பதில் ஐயமில்லை!



No comments:

Post a Comment