Monday, July 11, 2011

ஆண் பெண் நட்பு................

 நட்பு...கடவுளால் கொடுக்கப்பட்ட அற்புதமான ஓர் உறவு. தாய் போல ஒருவனை சுமக்க முடியுமெனின் அது நட்பைத் தவிர வேறு ஒன்றாலும் இயலாது.. அப்படிப் பட்ட நட்பு ஓரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலோ, ஓர் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலோ அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலோ காணப்படலாம். இதில் எந்த தவறும் உண்டாக வாய்ப்பில்லை. ஆனால் தற்சமயம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களினால் ஆண் பெண் நட்பினை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது படிக்காத சமூகத்திடம் மட்டுமல்ல, படித்த சமூகத்திடமும் அதிகளவாகப் பெருகிவிட்டது. ஓர் ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினால் போதும், நட்பென்ற உன்னதமான உறவினைக் களங்கப்படுத்தி இருவருக்கும் இடையில் சம்மந்தமில்லாத கதைகளை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. பெரும்பாலான பெற்றோரும்  இப்போது தமது பிள்ளைகளை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்.

 பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் “ எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ.....” என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றார்கள்.

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா ? தவறுகள் அங்கு நடக்கவில்லையா ? என்பதைப் பெற்றோர்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத்தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியாயமான குணங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் போய்விடுகிறார்கள்.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைதான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளை விட, “ நீ ஆண், நீ பெண்” என்று பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அளவுக்கு மீறி எச்செயலிலும் ஈடுபடவும் விடக்கூடாது. அதைவிடுத்து பெண்பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதன் மூலம் பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, தாமும் வருந்தி கொண்டு, ஏதோ, “ நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம் .” என்று சொல்வதில் நியாயம் இல்லை.


No comments:

Post a Comment