Friday, July 10, 2020

பிள்ளையார் சுழி எதற்காக? - பகுதி 2

தொடர்ச்சி........


கவிஞனுக்கு இந்தக் கஸ்ரம் இல்லை. அவன் அழகுணர்ச்சி, கவிதை, அளவு கடந்த நெகிழ்ச்சி இவற்றுடன் பிரபஞ்சத்தை நெருங்குவதால் பிரபஞ்சம் தன் இரகசியங்களை அவன் காதுகளில் கிசுகிசுத்து விட்டு சிரிக்கின்றது. விஞ்ஞானி ஆண் தன்மையுடன் பிரபஞ்சத்தை அடக்கியாள நினைக்கிறான். கவிஞன் பெண் தன்மையுடன் பிரபஞ்சத்தை நெருங்குவதால், பிரபஞ்சம் அவனிடம் தன்னைக் கொடுக்கின்றது. தன் சகல இரகசியங்களையும் ஒளிவுமறைவின்றி சொல்லிவிடுகிறது.

கவிஞன் பிரபஞ்சத்திடம் ஒரு பெண் போல் சரணடைகிறான். பிரபஞ்சம் அவனிடம் காதல் கொள்கிறது. ஆனால் விஞ்ஞானி பிரபஞ்சத்தை கைப்பற்றுகின்றான். கவிஞன் பிரபஞ்சத்தின் கரம் பற்றுகின்றான். முன்னது கற்பழிப்பிற்குச் சமம் .... பின்னது காதல் முடிந்த கலவிக்கு நிகர். 

ஒரு தாமரையை ஆராய்கிற விஞ்ஞானி, அதைத் தன் ஆய்வு மேசையில் வைத்து அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து அதன் உண்மைகளை கண்டறிகின்றான். கவிஞனோ வெளியில் உள்ள தாமரையைச் சட்டை செய்வதே இல்லை. அவனுக்குத் தாமரை பற்றிய தகவல் வேண்டுமென்றால் அவன் தவிப்பு, காதல் தாமரைக்குப் புரியும். அவனுள் அது மலரும். விரியும்.. தன்னைப் பற்றிய சகல இரகசியங்களையும் அது அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும். இதுதான் வேதகாலத்தில் நடந்தது... அதற்கு முன்னும் நடந்தது... இன்றும் நல்ல கவிஞனுக்கு இது தான் நடக்கிறது.

ஒரு மலருக்கு நிறம், மணம், குணம், வடிவம் இவை உண்டு என்று மட்டுமே பலர் நினைத்தனர். மலருக்கு ஒளி உண்டு என்பதை ` கிரிலியோன் போட்டோகிராபி` உருவாகும் வரை எவருமே அறியவில்லை. ஆனால் கிரிலியோன் போட்டோகிராபியைப் பற்றி ஏதும் அறியமுடியாத மகாகவி பாரதி `சோலை மலர் ஒளியோ உன் சுந்தரப் புன்னகைதான்` என்று மலருக்கு ஒளி உண்டு என்று அநாயாசமாகச் சொல்லிவிட்டான். பாரதிக்கு தகவல் கொடுத்தது எது? பூ. அது அவனை நேசிக்கிறது.எனவே தன் தகவல்களைப் பாட்டில் பதிவு செய்யும் படி யாசிக்கிறது.

                                                                                                                            தொடரும்..........

No comments:

Post a Comment