Friday, July 10, 2020

இது ஓர் ஆதங்கம்


பல இன்னல்களைச் சந்தித்த தமிழ் மக்கள் அன்று ஓரளவிற்கேனும் தமது குடும்பங்களுடன் நின்மதியான ஓர் வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அன்றைய காலத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிய இடர்பாடு ஒரு பகுதியினரூடாகவே இருந்து வந்தது ( நீங்கள் உங்களுக்கு சார்பான பகுதியினரை விலக்கிப் பார்த்துக் கொள்ளலாம் ). ஆனால் இன்று எமது மக்கள் எந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பது என்று தெரியாது சொல்லனா துயரங்களில் வாடி வருகின்றனர். 

அரசியல் அழுத்தங்கள், சமூக வன்முறைகள், குடும்ப வன்முறைகள், வாள் வெட்டுக் குழுக்களின் அடக்கு முறைகள், போதைப் பொருள் வர்த்தகம், நுன்கடன் சுமைகள் எனப் பல..

இந் நிலையில், அரசியல் களங்கள் சூடு பிடித்து ஓடிக் கொண்டு இருக்கின்றன. இம் முறை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் பலர் தமிழர்களுக்கான உரிமையை வென்று கொடுக்க தேர்தல் களத்தில் பிரவேசித்துள்ளனர். பல அறிந்த முகங்களுடன் பல புதிய முகங்களும் இம் முறை இப் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

அண்மையில் ஒரு பிரபல கட்சியின் வேட்பாளர் ஒருவருடன் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அவர் தேர்தல் என்றால் என்ன?   ஏன் தேர்தலில் வாக்குப் போட வேண்டும்? ஏன் தமிழ் கட்சிகளுக்கு வாக்குப் போட வேண்டும் என்ற விளக்கத்துடன் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து தான் முன்னிலைப்படுத்தும் கட்சிக்கும் தனக்குமான வாக்கைப் பதிவிடுமாறும் கோரிக் கொண்டார். பின்னர் கேள்வி கேட்பதற்கான நேரத்தினையும் தந்தார். எம் பலரிடமும் இருந்து வந்த ஒரே கேள்வி “ இவ்வளவு காலமும் என்ன செய்தனீங்கள், இப்போ என்ன புதுசா செய்யப் போறீங்கள்”?

சின்னதாக ஒரு சிரிப்பு அவர் முகத்தில். ஏனெனில் இக் கேள்வி தான் தன்னை நோக்கிவரும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இவ்வளவு காலமும் இருந்தவங்கள் ஒன்றும் செய்யேல்லை என்று நீங்கள் நினைத்தால், அது தான் நாங்கள் புதுசா வந்திருக்கிறம் தானே எங்களை அனுப்புங்கோ, நாங்கள் செய்து காட்டிறம்”என்று சொல்லி வழக்கத்தை மாத்தாமல்(அதாவது வழமையா போடிற கட்சிக்கே போடுங்கோ, வேற ஆட்களை தெரிவு செய்யுங்கோ)  ஆட்களை மாத்துங்கோ என்றார். நாங்கள் பதில் கூறவில்லை. சின்ன ஒரு புன்சிரிப்பு ஒன்றை தவளவிட்டோம். தன் பதிலில் எமக்கு திருப்தி இல்லை என்பதை புரிந்து கொண்டு அவர் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

இன்னொரு அரசியல் பிரதேச சபையில் தெரிவாகியவர்களை வைத்து நடைபெறுகிறது. சிரிப்பும் வருகிறது. அவர் றோட்டுப் போட்டு தந்தார். அவர் வீதிகளுக்கு விளக்கு போட்டு தந்தார். அவர் கொரோனா காலத்தில சாப்பாடு தந்தார். எல்லாம் செய்தார்!!! எல்லாம் தந்தார்!!! யாருடைய காசில தந்தார். யாருடைய காசில செய்தார். வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகளில் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவது வழமை. இதை தமது தேர்தல் விளம்பரத்திற்காக பயன்படுத்துகின்ற கோமாளிகளை என்னும் போது சிரிப்பு வருகின்றது. 

நான் உங்களைக் சில சந்தேகங்கள் கேட்கிறேன்!!! 

நீங்கள் கொடுத்த ஒரு கிழமைக்கான நிதிகளாகட்டும், பொருட்களாகட்டும் அவனின் வாழ் நாள் தேவையினை நிறைவேற்றுமா? நீ கொடுத்தது முடிவடைந்தவுடன் அவன் இன்னொரு கையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பான். இப்போது அவன் யாருக்கு வாக்களிப்பது? முதலில் உதவி செய்த உனக்கா? கடைசியாக உதவி செய்துவிட்டு போனவனுக்கா? 

உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். நீங்கள் செய்த நற்செயல்களுக்கு தலைவணங்குகிறேன். ஆனால், நீங்கள் உதவி செய்த குடும்பங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டினீர்கள் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன். அவ் வறிய குடும்ப பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு எவ்வகையில் பங்களிப்பு செய்தீர்கள். கல்வியால் தான் உங்களின் குடும்ப நிலைமையை மாற்றலாம் என்ற அறிவுரையை கொடுத்தீர்களா?  நீங்கள் செய்யும் அரசியல் எத்தகையது என்ற புரிதலுக்கு வருவதே கடினமாக உள்ளது.  

ஒரு குறித்த அரசியல் கட்சியின் இரு வேட்பாளர்களின் நிலை....

ஒரு வேட்பாளர் கூறுகிறார்... ”இன்று தமிழர்கள் மத்தியில் பௌத்த கலாச்சாரத்தையும் இராணுவ மயமாக்கலையும் அரசு வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடுகிறது.”

அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு வேட்பாளர்... “ தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது தனது பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் இராணுவ ஆதரவினை அரசிடம் கேட்டுள்ளார்” 


உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? விளங்கவில்லையே? ஒரே கட்சியில் உள்ள இருவரின் மனநிலையில் இப்படியான வேறுபாடு என்றால்.. நீங்கள் ஒரே கட்சியாக சேர்ந்து எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவீர்கள். 

       “ மக்களே இப்படியானவர்களிடம் சற்று அவதானமாக இருங்கள்”

ஒரு விடயம் மட்டும் நிதர்சனமான உண்மை. அவர்கள் இருந்த போதே பெற்றுக் கொடுக்காத அரசியல் தீர்வினை இங்கு எவருமே எமக்குப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. எதைச் செய்யப் போகிறோம் என்ற கொள்கை விளக்கம் கூட இல்லாது எதிர்ப்பு அரசியலை மட்டுமே பிரச்சாரமாகச் செய்யும் இவர்கள் எதையுமே பெற்றுத் தரமாட்டார்கள்.

தமிழ் மக்களாகிய எமது இப்போதைய தேவை அரசியல் தீர்வா? நின்மதியான வாழ்வா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சராசரியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்லும் ஒரு தமிழனின் தற்போதைய தேவை....
  • வாள்வெட்டுக் கலாசாரத்தை முற்றாக அடக்க வேண்டும். இதை எந்த அரசியல் கட்சி நிறைவேற்றும்.
  • எமது பிரதேசங்களுக்குள் நடைபெறும் போதைப் பொருள் வியாபாரத்தை முடக்குவதற்கு எந்த அரசியல் கட்சி ஆதரவளிக்கும்
  • வீடற்றவர்களுக்கான வீட்டுத் திட்டங்களை எந்த அரசியல் கட்சி விரைவில் பெற்றுக் கொடுக்கும்
  • தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை எந்தக் கட்சி விரும்பி ஏற்றுக் கொள்ளும்
  • புணர்வாழ்வில் இருந்து திரும்பியவர்களை எந்தக் கட்சி திரும்பிப்பார்க்கும்
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான சரியான சந்தைப்படுத்தல்களை எந்தக் கட்சி ஏற்படுத்திக் கொடுக்கும்
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிரந்தரத்தீர்வினை யார் பெற்றுக் கொடுப்பீர்கள்
  • சகல துறைகளிலும் பிரகாசிக்கக் கூடிய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். இவர்களுக்கான முறையான பயிற்சிகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்போவது யார்?
  • தேசிய அணிகளில் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கான பாதையை அல்லது முறையான வழிகாட்டலை யாரால் செய்து தர முடியும்
இது போன்ற பல கோரிக்கைகள் உள்ளன. எங்களுக்கு முதலில் இவற்றுக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள். பின்னர் தேசியத்தைப் பெற்றுத்தாருங்கள். 

பசியோடு இருப்பவனுக்கு சமையல் அறையை கட்டித்தாறம் நீ சமைச்சு சாப்பிடு என்று சொல்வது முட்டாள் தனம். 

உங்கள் அரசியல் தீர்வும் அது போன்றது தான். மக்களுக்கான உடனடித்  தேவைகள் பல உள்ளன. அதைவிடுத்து ஏமாற்று அரசியலில் ஈடுபடாதீர்கள்.

இது அரசியல் பதிவல்ல. ஓர் ஆதங்கப் பகிர்வு.

No comments:

Post a Comment