Tuesday, July 21, 2020

தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் தொடர்பான சட்டவிதிகள் - 01

அண்மைக் காலத்தில் கொவிட் -19 நோய் பரவுதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தனிமைப்படுத்தல் (Quarantine) எனும் சொற்பதம் பொது மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், சுகாதாரத் துறையிலும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகிறது.
சமூகத்திலுள்ள ஆட்களிடையே விரைவில் பரவக்கூடிய நோய்களால் ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைப்பதற்காக அல்லது அத்தகைய நோய் நிலைமை ஒன்றைக் கட்டுப்படுத்துவதற்காக நோய் ஏற்பட்ட ஆட்களால் அல்லது நோயைக் காவக்கூடிய சந்தேகத்திற்கு உரிய ஆட்களால் குறித்த நோய் சமூகத்தில் மேலும் பரவாது தடுக்கும் நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் செயற்பாடு காணப்படுகின்றது. இது தொற்று நோய்களைத் தடுப்பதற்கான மிகவும் பழமை வாய்ந்த முறை என்பதுடன் பின்னர் இது குறித்த நோய்த்தடுப்பு விடயமானது சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாகியது.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்பாக இலங்கையில் பொதுவாக தொற்று நோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளாக பின்வரும் சட்டங்களைக் குறிப்பிடமுடியும்.
(1) 1866ம் ஆண்டின் 08ம் இலக்க தொற்று நோய்கள் சட்டம் (Contagious Diseases Ordinance)- [சின்னம்மை (Small pox) மற்றும் வாந்திபேதி (Cholera) நோய் கட்டுப்பாடு]
(2) 1862ம் ஆண்டின் 15ம் இலக்க பீடைகள் கட்டளைச் சட்டதின் சில பகுதிகள்
(Nuisance Ordinance)
(3) 1883ம் ஆண்டின் 02ம் இலக்க தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயம் XIV
(Penal Code)
(4) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப் -படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டம் (Quarantine and Prevention of Diseases Ordinance) - [கொள்ளை நோய் (Plague) மற்றும் சகல தொற்று நோய்களையும் தடுப்பதற்கான சட்டம்]
(5) 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைக் கோவையின் பொதுத் தொல்லைகள் தொட்பான அத்தியாயம் IX இன் கீழான ஏற்பாடுகள். (Criminal Procedure Code)
(6) 2007ம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்பு பெருக்கத் தடுப்புச் சட்டம் (Prevention of Mosquito Breeding) - [டெங்கு நோய் கட்டுப்பாடு]
மேற்படி சட்டங்கள் ஒவ்வொன்றும் தொற்று நோய்க் கட்டுப்பாடு தொடர்பில் பொலிசார், உள்ளூராட்சி சபைகள், சுகாதாரத் திணைக்களம் என வெவ்வேறான நபர்கள்/ அதிகார மையங்களுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்வதாகக் காணப்படுகிறது.

இவற்றில் பொது சுகாதாரத் துறைசார் சட்டங்களாக,
(1) Quarantine and Prevention of Diseases Ordinance,
(2) Prevention of Mosquito Breeding Act என்பன உள்ளதுடன்
Prevention of Mosquito Breeding Act டெங்கு நோயுடன் மட்டும் தொடர்புறுவதுடன் Quarantine and Prevention of Diseases Ordinance ஆனது தொற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பில் விரிவான பிரயோகம் உடையது.
இதன் பின்னணியில் தனிமைப்படுத்தலும் நோயத்தடுப்பும் கட்டளைச் சட்டம் [Quarantine and Prevention of Diseases Ordinance] தொடர்பில் ஆராயுமிடத்து இது ஆங்கிலேயரது ஆட்சிக் காலதில் ஆக்கப்பட்ட ஓர் மிகவும் பழமைவாய்ந்த சட்டமாகும்.
இது பிரதானமாக Plague நோயைக் கட்டுப் படுத்தும் நோக்கில் ஆக்கப்பட்டிருப்பினும் தொற்றும் தன்மையுடைய சகல நோய்களும் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் பரவுதலைத் தடுத்தல் இச்சட்டவாக்கத்தின் நோக்கமென அதன் நீள்தலைப்பு கூறுகிறது.

COPY FROM:

Kajenthiran Sathithasan

----- தொடர்ச்சி விரைவில் -----

No comments:

Post a Comment