இச்சட்டத்தை நிருவகித்தல் அல்லது அமுலாக்கம் தொடர்பில் நோக்குமிடத்து 03 விடயங்கள் அல்லது 03 படிநிலைகள் காணப்படுகிறது.
1. தகுதிவாய்ந்த அதிகாரி (Proper Authority)
2. அதிகாரக் கையளிப்பு (Delegation of Powers)
3. பரிசோதகர்களை நியமித்தல் (Appointment of Inspectors)
#தகுதிவாய்ந்த #அதிகாரிகள் தொடர்பில்
7481 இலக்க 28.08.1925 திகதிய மற்றும்
9134 இலக்க 11.06.1943 திகதிய அரச வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தானியங்களைக் களஞ்சியப்படுத்தலும் புழுவியாதியைத் தடுத்தலுக்குமான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் (Quarantine Regulations related to Storage of Grains and Ancylostomiasis) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02 மற்றும் பிரிவு 03 இன் நோக்கெல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதிவாய்ந்த அதிகாரிகள் எனும் விடயம் தொடர்பான பொருட்கோடல் இவ் ஒழுங்குவிதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்
(1) தீவு முழுவதற்குமான தகுதிவாய்ந்த அதிகாரியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும்,
(2) உள்ளூர் இடப்பகுதிகளுக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகளாக அந்தந்த மாநகர சபை, நகர சபை அல்லது பட்டின/கிராம சபைகளின் (தற்போது பிரதேச சபைகள்) தவிசாளர்கள் அல்லது அந்த இடப்பரப்புகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள்,
(3) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் தொடர்பில் Director of Qurantine அல்லது துறைமுக சுகாதார அதிகாரி (Port Health Officer),
(4) இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகிய படைத்துறைகளின் விடயத்தில் அந்தந்த படைப்பிரிவின் வைத்தியர்கள் (Medical Officer),
(5) மேற்படி விடயப்பரப்பினுள் அடங்காத ஏனைய விடயங்கள் தொடர்பில் அந்தந்த பிரிவுக்குப் பொறுபான சுகாதார சேவைகள் அத்தியட்சகர்கள் (தற்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - RDHS) இடப்பரப்புக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்படலாம்.
இதனடிப்படையில் காலத்துக்குக் காலம் பல ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுவந்துள்ளது. அதில் பெரும்பாலான ஒழுங்குவிதிகளில் இடப்பரப்பிற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளாக உள்ளூராட்சி சபையின் தவிசாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புழுவியாதி தெடர்பான ஒழுங்குவிதியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும், அந்த இடப்பரப்புக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளும் இடப்பரப்புக்குரிய தகுதி வாய்ந்த அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
#அதிகாரக் #கையளிப்பு தொடர்பில் நோக்குமிடத்து 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 11 பிரகாரம் அமைச்சர் இச்சட்டத்தின் அல்லது ஒழுங்கு விதிகளின் அமுல்ப்படுத்துகை தொடர்பில் தனது அதிகாரங்களை உள்ளூர் அதிகார சபைகளுக்குக் கையளிக்கலாம்.
அத்துடன் 10713 இலக்க 17.09.1954 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கமைய பிரிவு 37 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரியானவர் எழுத்துமூலமாக தனது அதிகாரத்தை கையளிப்பு செய்ய முடியும். இதன் மூலமாக இடப்பரப்புகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை ஏற்பாடுசெய்து கொள்ளலாம்.
#பரிசோதகர்களை #நியமித்தல் தொடர்பில்
1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் 3(1)(r) பிரிவில் இச்சட்டதிலும், இதன்கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக பரிசோதகர்களை நியமித்தலுக்கும், அவர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்குவதற்குமான ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்காக அமைச்சர் அதே சட்டத்தின் பிரிவு 2 இன்கீழ் தனது ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தைப் பிரயோகிக்க முடியும்.
அத்துடன் 9134 இலக்க 11.06.1943 திகதிய வர்த்தமானியிலும் 6365 இலக்க 22.04.1938 திகதிய வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட பொது ஒழுங்குவிதிகள் எனும் தலைப்பின் கீழான பிரிவு 38 "பரிசோதகர் (Inspector)" என்பதற்கான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுகிறது. அதன்படி பரிசோதகர் என்பது சுகாதார சேவைகள் திணைக்களத்தின் "சுகாதார உதவியாளர்கள் (Sanitary Assistants) அல்லது மாநகர சபைகள்/ நகர சபைகளின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான ஏவரேனும் பரிசோதகர் அல்லது உப பரிசோதகரை அல்லது Director of Quarantine Department இனால் நியமிக்கப்பட்ட எவரேனும் பரிசோதகரை குறிப்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். Sanitary Assistant என்பது பின்னர் Sanitary Inspector/ Sanitary Board Inspector எனவும் தற்போது Public Health Inspector(PHI) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே ஒழுங்குவிதிகளின் பிரிவு 39 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரி தனது தற்துணிபின் அடிப்படையில் இச்சட்டத்தின் பணிகளை ஆற்றுவதற்கான பரிசோதகர்களை நியமனம் செய்யவும், இரத்துச் செய்யவும் முடியும்.
இங்கு பரிசோதகர்கள் நியமிக்கப்படாவிடின் அல்லது பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்படாவிடின் சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளின் அமுலாக்கல் முழுமை பெறாது.
அத்துடன் 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகள் அனைத்தும் அதன் பிரிவு 12 இன் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும். அத்தகைய வர்தமானி பிரசுரிக்கப்பட்ட திகதியிலிருந்து அது சட்ட வலுக்கொள்ளும் எனவும் 12ம் பிரிவு குறிப்பிடுகிறது.
Kajenthiran Sathithasan
------ தொடர்ச்சி விரைவில் -----
No comments:
Post a Comment