Monday, July 20, 2020

ஏலுமெண்டால் வாங்க பாப்பம்???

ஏலும் எண்டால் வாங்கோவன் பார்ப்பம் !
ஏலும் எண்டால் எங்களை ஒருக்கால் நல்லது கதைக்க சேர்த்துப் பாருங்கோவன் பார்ப்பம்!
நாங்கள் யாரு தெரியும் தானே!! எங்களைப் போல யாராளையும் உங்களை பேக்காட்ட முடியுமே!
நாங்கள் வெளியால அப்பிடி தான் கதைப்பம்!
உள்ளுக்குள்ள எங்களுக்கும் நடுங்குமெல்ல!
நாங்கள் எங்களுக்குள்ள மேடையில பேசேக்குள்ள பகிரங்க விவாதத்துற்கு அழைப்பம்!
அதை நீங்கள் நம்பிறதே!!!
ஹையோ!!! ஹையோ!!!
😀😀😀😀😀😀
மேடேல கதைக்கேக்க ஆர்வக் கோலாறுகள் சிலதுக்காக நாங்கள் அடிக்கிற பம்பல் கதையளையும் நம்பிறியளே!
நாலு பேர் கைதட்டோனும் என்று வாய்க்கு வந்ததை நாங்கள் அடிச்சு விடுறது!
அதைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு பகிரங்க விவாதம் என்று போஸ்டர் அடிச்சுக் கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
நாங்கள் போடிற கூட்டங்களை கவனிக்கிறனியலோ???
யார் கேள்வி கேட்கமாட்டாங்களோ அங்க தான் நாங்கள் கூட்டம் போட்டு கத்துவம்!!!
அல்லது
இந்த விளையாட்டுக் கழக பெடியள் கூப்பிட்டா 4 பற்றும் 5 பந்தும் கொண்டு போய் குடுத்து அவங்களை கேள்வி கேட்கவிடாமல் பண்ணிடுவம்!!!
நீங்கள் இப்பிடி பகிரங்க விவாதம் எண்டு கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
கொள்கையே இல்லாமல் தமிழ் தேசிய கொள்கையை சொல்லிச் சொல்லி பேக்காட்டிக் கொண்டு ஏதோ ஐஞ்சு பத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறம்!!!
அதில மண்ணள்ளிப் போடிறமாதிரி எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்….!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒரே கொள்கையுடைய இரண்டு பேர் சேர்ந்து கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்றால் அதுக்கே மணித்தியாலக் கணக்காகும்!!!
கொள்கையே இல்லாமல் சுத்திக்கொண்டு ஒருத்தனை ஒருத்தன் குற்றம் சொல்லிக் கொண்டு தேர்தல் வரைக்கும் பம்மாத்திக் கொண்டு திரியிற எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒருத்தருமே இல்லாத இடத்தில் ஒருத்தன் மட்டும் வந்து நிண்டு கொண்டு,
அவன் செய்யிற அளப்பறை தாங்கவே முடியுதில்லை!!!
அடே !!! உங்களை விலங்குகளின்ர பெயரை சொல்லி கூப்பிடலாம் என்றால் அதுகள் பாவம்!!!
அட மானங்கெட்ட மனித கூட்டமே!!!
தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒருவன் இப்போதுள்ள உங்கள் கூத்துக்களை நேசிக்க மாட்டான்!!!
உங்கள் கூத்துக்களால் உடையப்போவது எங்கள் தனித்துவமான வாக்குகள் மட்டுமே!!!
வாக்குகளை சின்னாபின்னமாக்கி இனிவரும் காலங்களில் சிங்களப் பிரதான கட்சிகளை தமிழர் தாயகங்களில் இருந்தும் பாராளுமன்றம் அனுப்பிவைக்கப் போறியள்!!!


VTamil குழுமத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கம்


மக்கள் மன்றில் ஓரணியாக நிற்க முன்வராதவர்கள்,எவ்வாறு பாராளுமன்றில் தமிழர் தரப்பை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தப்போகிரார்கள். ????
கட்சி பிரதிநிதிகள் கேட்கிறார்கள் இல்லை,பிரசார கூட்டங்கள் காரணமாக பிரதிநிதிகளை பிரேரிக்க முடியவில்லை - திரு.விக்னேஷ்வரன்
கட்சி வேலைகள்,பிரசார பணி நிமித்தம் கலந்துகொள்ள முடியாதுள்ளது - திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திர குமார் கலந்து கொண்டால் நானும் வருகிறேன் - திரு.சுமந்திரன்.




இந்தப் பகிரங்க விவாதம் தொடர்பாக முகப்புத்தகங்களில் வாசித்த சில பதிவுகளையும் இணைக்கிறேன்.

கஜேந்திரகுமார் வரமாட்டார் என்பதால் தங்கள் தரப்பில் சுகாஸ் காண்டிபன் வருவதாக க.குமார் அறிவித்தாராம். அப்படி என்றால் தங்கள் தரப்பிலும் சுமந்திரன் வராமல் இரண்டு பிரதிநிதிகளை அனுப்புவதாக சுமந்திரன் சொன்னதால் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
விக்னேஷ்வரன் எந்த பதிலும் வழங்கவில்லை. என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
கட்சியின் பொறுப்பு கூறக்கூடியவர்கள் பங்குபற்றுவதன் மூலம் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவது தான் ஏற்பாட்டாளர்களின் நோக்கம். அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்தை பற்றி பேசுவது.
யாழ்பாணத்தின் அடிப்படை தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வுசெய்து வைத்திருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.
ஆக சில்லறை தனமான விவாதமாக இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒழுங்கு செய்திருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
அதை சில்லறை தனமாக கையாண்டது க.குமாரும் விக்னேஷ்வரனும்.
அதை சில்லறை தனமாக உருட்டுவது சுகாஸ்.
சுகாஸ் உருட்டினதை சில்லறைத்தனமாக உருட்டுவது தொண்டரடிப்பெடியல்.
தனிய தீர்வு இனப்பிரச்சனை என்று மட்டும் கூவிட்டு திரிஞ்சா கோவணமும் போயிரும், மக்களின் இருப்புக்கான விடையங்களையும் சிந்திக்கோனும்.
அதைவிட்டிட்டு செம்மறி கூத்துகள்.
மக்களுக்கான உருப்படியான செயற்திட்டம் இல்லை.


நேரடி விவாதம்- நிகழ மறுக்கும் அதிசயம்!
கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்கள் குழப்பங்கள் அற்ற நிலையில், தெளிவான நிகழ்ச்சி நிரலோடும், வரையறைகளோடும் ஒழுங்கமைக்கப்படும் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சிகள் தமிழ் அரசியலில் சூழலில் நிகழ்வதே இல்லை. அப்படியான ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ் அரசியலில், குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கின்றது. அப்படியொரு விவாத நிகழ்வு இன்று நிகழும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது நிகழ மறுக்கும் அதிசயமாகவே போயிருக்கின்றது.
தேர்தல் கால நேரடி விவாதங்களில் நெறிப்படுத்தல்கள், வரையறைகளுக்குள் நின்று விவாதிக்கும் அளவுக்கான மனநிலையை எந்தவொரு அரசியல் தலைவரும் வளர்த்துக் கொள்வது சார்ந்து ஆர்வம் கொள்வதில்லை. தங்களுக்கு தோதான களத்தில் நின்று ‘கத்தி ஓய்வது’ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அதுதான், அவர்கள் அளவில் பாதுகாப்பானது என்றும் கருதுகிறார்கள். அதனை, அவர்களின் ஆளுமை குறைபாடு என்று கொள்ள முடியும்.
‘V தமிழ்’ குழு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவிருந்த, விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை கலந்து கொள்ளுமாறு அழைத்திருக்கின்றது. கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவர், காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டால், தன்னால் பங்கேற்க முடியும் என்றிருக்கிறார். கஜேந்திரகுமாரும் சுமந்திரன் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உறுதியளித்திருக்கின்றார். விக்னேஸ்வரனோ, கூட்டணியின் ஏனைய முக்கியஸ்தர்களோ விவாதத்தில் கலந்து கொள்வது சார்ந்து ஆரம்பம் முதல் பின்னடித்திருக்கின்றனர். (விக்னேஸ்வரன், கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பது சார்ந்து தொடர்ச்சியாக பின்னடிப்பவர். அதுதான், கேள்வி- பதில் அறிக்கைகளில் அவர் தங்கியிருப்பதற்கு காரணம். அவரிடம் நேரடி விவாதமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்படுவது வேண்டாத வேலை. அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.)
ஆக, சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான மற்றொரு நேரடி விவாதம் நிகழும் வாய்ப்பு உருவாகியிருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமாரும் கழன்று கொள்ள நிகழ்வு இரத்தாகியிருக்கின்றது. கஜேந்திரகுமார் தனக்குப் பதிலாக இருவரை பிரேரித்திருக்கின்றார், ஆரம்பத்திலேயே கஜேந்திரகுமார் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக அறிவித்த சுமந்திரன், கஜேந்திரகுமாரும் விலகிக் கொண்ட நிலையில், தானும் இருவரை பிரேரித்திருக்கின்றார். ஆக, இந்த விவாதத்தில் யார் யார் எப்போது, என்ன காரணங்களுக்காக விலகியிருக்கின்றார்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி இரத்துத் தொடர்பில் தெளிவுபடுத்தி காணொலியையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் கடந்த பொதுத் தேர்தல் காலங்களில் நேரடி விவாதங்கள் இரண்டு இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவை ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்களினால் சரியான நிகழ்வுகளாக அமைந்திருக்கவில்லை. அத்தோடு, அந்த நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இருக்கவில்லை. ஒருவகையில், குறிவைத்து திட்டமிட்டு தாக்கும் நிகழ்வுகளாகவே அவை முடிந்திருக்கின்றன. அப்படியான நிலையில், இன்றைய நிகழ்வினை ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்திருக்கும் தரப்புக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.
ஆனால், நேரடி விவாதமொன்று வெற்றி- தோல்வி என்கிற கட்டத்தினுள் மட்டும் வைத்துப் பார்க்கப்படும் மனநிலையினால், நிகழ முடியாமல் போயிருக்கின்றது. ஆரோக்கியமான விவாதமொன்றுக்கான கடப்பாடுகள், வரையறைகள் சார்ந்து அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, அவர்களின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் கூட தேடி அறிந்து கொள்ள வேண்டும். அதுதான், அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அதனைச் செய்யாதுவிட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் உண்மை தெரிந்த பின்னரும் சமாளிப்புக்களைச் செய்வது என்பது, ஒரு வகையிலான இயலாமை. அந்த இயலாமையை அரசியலின் ஒரு கட்டமாக கொண்டு நடக்காதீர்கள். அது உங்களை நிச்சயமாகத் தோற்கடிக்கும். தேறுவதற்கான வாய்ப்புக்களை மறுதலிக்கும். ஏனெனில், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய முண்ணனி சார்பில் சுகாஸ், காண்டீபன் ஆகிய இருவரும் பங்கு பற்றும் நிலையில் ஏன் கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் பங்கு பற்றமுடியவில்லை. கட்டாயம் கஜேந்திரகுமார் தான் வேணும் என்று ஏன் ஆடம் பிடிக்கவேண்டும்?
இதை ஒரு தம்பி கேட்டிருந்தார்.
தம்பி சுகாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும், மிக சிறந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர். ஆனால் வாதாடல் நிகழ்வு என்று வந்துவிட்டால் அது வாக்கு வாதம் அளவுக்கு செல்லும். மூச்சை பிடித்து தம் கட்டி கொண்டு அவர் பேசும் தோரணை அது ஒருவகை பட்டிமன்றம் போன்ற தன்மையை கொண்டுவரும். அது ஒரு இயல்பான அரசியல் கலந்துரையாடல் போன்று நிச்சயம் இருக்காது.
இதை சுமந்திரன் விரும்புவதில்லை. அல்லது ஆள் பட்டிமன்றத்தில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை.
காண்டீபன் அவர்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அவர் ஒரு பிழைக்கான மன்னிப்பை கூட கவிதையில் சொல்லி கழுத்தறுப்பார் . ஆகவே சுமந்திரன் ஒரு கவிஞர் அல்ல. அதனால் அவரை தவிர்க்க விரும்பி இருக்கலாம்.
எதிரில் யாருடன் வாதாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
ஆகவே இங்கு கஜேந்திரகுமார் அவர்கள் இன்றைய திருநெல்வேலி கூட்டத்துக்கு காண்டீபனை அனுப்பிவிட்டு அவர் அந்த நிகழ்வுக்கு சென்று இருக்கலாம்.
இது ஒரு தவறு அல்லது திட்டமிட்ட தவறு . அவ்வளவு தான்.


விக்கினேஸ்வரனுக்கு பதில் சொல்லத் தெரியாது ஓகே, கஜேந்திரகுமார் ஏன் வராமல் ஓடினார் என்று கேட்கிறார்கள். எனக்கு அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை என்றேன்.ஏன்?
நிகழ்வு எதைப்பற்றியது?
-அடுத்த ஐந்து வருடத்தில் தமிழருக்கு என்ன செய்வீர்கள், என்ன ப்ளான் என்பது பற்றியது.
முன்னணியின்(காங்கிரஸின்) கொள்கை என்ன?
-ஒரு நாடு இருதேசம்
அடுத்த 5 வருடங்களில் இந்த தனித் தேசகோஷம் தொடர்பில் என்ன measurable முன்னேற்றம் காட்டமுடியும்?
-ஒன்றுமில்லை
தட்டுத்தவறி ஒரு சீட் வென்றால், அதைவைத்து அரசுடன் எந்த பேரம்பேசல் செய்ய முடியும்?
-ஒன்றுமில்லை.கணக்கே எடுக்காமல் கடந்துபோவார்கள்
கூட்டமைப்பு தொடர்பிலான இவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது என்ன?
-தீர்வு தொடர்பில் எந்த measurable முன்னேற்றமும் செய்யவில்லை என்பது.
அடுத்த 5ஆண்டுகளில் முன்னணி தன் கோஷம் தொடர்பில் அடையக்கூடிய அடைவு என்ன என்று சொல்லமுடியும்?
-தீர்வு தொடர்பில் பல இடங்களில் வலியுறுத்தினோம் என்று சொல்லமுடியுமே தவிர வேற எதுவும் செய்யமுடியாது.
அப்ப இதுக்கும் கூட்டமைப்பின் பதில்களுக்கும் என்ன வித்தியாசம்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பாச்சும் எதோ ஒரு சாத்தியமான யாப்புருவாக்கத்தில் பயணித்தது. முன்னணி பூகோள அரசியல் வகுப்பெடுக்கத்தான் சரி.2009லயே வராத அமெரிக்காவும் இந்தியாவும் இனியுமா வந்து தூக்கிப்பிடிக்கப்போகுது.
அப்போ அடுத்த 5 வருஷங்களில் தீர்வு எடுத்து குடுக்க முடியாது. தீர்வு இல்லாமல் அபிவிருத்தியும் தேவையில்லை என்றார்கள், ஆக அபிவிருத்தியும் இல்லை.அப்போ அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு எந்த உறுதிமொழியை கொடுப்பார்கள்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பை குற்றம்சாட்டுவதை தொடர்ந்து செய்வோம் என்று வேண்டுமானால் உறுதிமொழி கொடுக்கலாம்.
அதுக்கு எதுக்கு இவர்கள்?டக்ளஸும் அங்கஜனும் போதுமே?
-ஆமாம்.
கூட்டமைப்பை குறை சொல்வதை விடுத்து, தங்களின் அரசியல் கோஷம் என்ன, அதை எப்படி எப்போ,எந்த சாத்திய வழியில் அடையப்போகிறார்களென்றோ, எதிர்ப்பதை மட்டுமே செய்யாமல் “பெரும்பான்மைத் தமிழ்” மக்களின் எதிர்பார்ப்பை எப்படிப் பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்றோ,இதுதான் எங்க பிரச்சனை என்று மாற்று சமூகத்தினருடனோ இவர்கள் எப்போதாவது விளக்கிப் பார்த்திருக்கிறீர்களா?
-இல்லை
இப்ப புரியுதா ஏன் வரலைனு? கடந்த வரலாறு பற்றி கதைக்காமலோ, கூட்டமைப்பை குறை சொல்லாமலோ, மக்களுக்கு என்ன செய்வோம், தீர்வை எப்படி எடுப்போம் என்பதுதொடர்பில் சாத்தியமான வழிமுறைகளோ கைவசம் இல்லை. பின்னர் எப்படி எதிர்காலம் தொடர்பில் சடையாத கட் அண்ட் ரைட் பதிலை கொடுக்கமுடியும்? சடைஞ்சு சடைஞ்சு பூகோள அரசியல் பேசலாம்.ஒரு கேள்வி கேட்டால் கேள்வியையே மறக்கடிக்கிறமாதிரி பதில் அலட்டலாம்.மூன்று நிமிஷத்தில் அரசியல் தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லச்சொன்னால் எப்படிச் சொல்வது? அதுக்கு பதிலா வெடிமுருகேசனை அனுப்பினால் விவாத நடுவில் சுமந்திரனை அடுத்த தேசியத்தலைவர் எண்டு அடிச்சுவிடுவான்..அதை வைச்சு கொஞ்ச அரசியலாச்சும் செய்யலாமே என்று கஜேந்திரகுமார் நினைத்ததில் தப்பில்லையே.!



 

No comments:

Post a Comment